
ஒரு எம்.பி.ப் பதவியுடன் பிரதமர்,ஜனாதிபதியான ரணில்; உலக சாதனை என்கின்றார் வஜிர
உலக வரலாற்றில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமர் பதவியையும் ஜனாதிபதிப் பதவியையும் பெற்ற ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சியென அதன் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
குளியாபிட்டியவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
1994ஆம் ஆண்டு முதல் ரணில் விக்ரமசிங்க என்ற தேசியத் தலைவர் இந்த நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் உண்மையைக் கூறி பல தேர்தல்களில் தோற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்குள் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு வருடங்களே தேவைப்பட்டன. ஆனால் மீண்டும் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி அவதூறு பரப்பி தேர்தலில் தோற்கடித்தனர்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேரொரு வேட்பாளரை முன்வைத்து வெற்றி பெற்று நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபட்டார். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் 300 பில்லியன் டொலர்ககளை திரட்ட முடியாவிட்டால் 2022ஆம் ஆண்டளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அவற்றை பொருட்படுத்தவில்லை.
உலக வரலாற்றில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமர் பதவியையும் ஜனாதிபதி பதவியையும் பெற்ற ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அந்த தலைவரை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும். உங்கள் உரிமைகளைக் காப்பாற்றிய தலைமையை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரியுங்கள் என்றார்.