இந்திய மீன்பிடிப் படகுகளை தடுத்து நிறுத்த முடியாது; முழுமையான மோதலாக மாறக்கூடாது

இந்திய மீன்பிடிப் படகுகளை தடுத்து நிறுத்த முடியாது; முழுமையான மோதலாக மாறக்கூடாது

இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் அனைத்து இந்திய மீன்பிடி படகுகளையும் தடுத்து நிறுத்த முடியாதெனவும் இலங்கை – இந்திய மீனவப் பிரச்சினையை தூர நோக்குடன் கையாள வேண்டுமெனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், இந்திய மீனவர்களின் மீன்பிடி முறை இலங்கையை மட்டுமல்லாது முழு உலகத்துக்குமான மீன்பிடி வளத்தை அழிக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் கைது தொடர்பான ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கை கடற்படையால் அனைத்து படகுகளையும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் நாங்கள் தொடர்ந்து அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கிறோம், மேலும் அவற்றைக் கண்டறிந்து தடுத்து வைப்பதில் தொடர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் துன்புறுத்தலைக் காரணம் காட்டி, ஆண்டுதோறும் நடைபெறும் கச்சதீவு விழா தொடர்பான நடவடிக்கைகளில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்கவில்லை. நிலைமை நுட்பமானதாக இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முழுமையான மோதலாக பிரச்சினையை அதிகரிக்காமல், அதைத் தீர்க்க நடைமுறை அணுகுமுறையின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இழுவை மீன்பிடி முறையானது மிகவும் ஆபத்தானது. அது இலங்கையர்களுக்கு மட்டுமல்லாது முழு உலகத்துக்குமான மீன்பிடி வளத்தை அழிக்குமெனவும் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமானதும் உணர்வுபூர்வமானதும், குறிப்பிடத்தக்க பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் பரிமாணங்களைக் கொண்டது. இப்பிரச்சினை தொடர்பில் இலங்கை கடற்படையினர் தீவிரமான பணியாற்றி வருகின்றனர். மீனவர்கள் மற்றும் அவர்களுடைய படகுகள் சிறைபிடிக்கப்படுவது மற்றும் அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வாராந்தம் அறிக்கை வெளியிடுகின்றனர்.

இவ்வாறான முயற்சிகள் காணப்படும் நிலையிலும் இழுவை வலை பொறிமுறை பயன்படுத்தப்படுவதால் இலங்கை வளங்கள் சுரண்டப்படும் நிலை நீடிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )