
ஜனாதிபதி- பாராளுமன்ற மோதல் தீவிரமடைகிறது
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நிஸங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததை அரசியலமைப்புப் பேரவை நிராகரித்ததன் காரணமாக, நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கம் [பாராளுமன்றம் ] சம்பந்தப்பட்ட நெருக்கடியானது புதிய மட்டத்திற்கு உயர்ந்துள்ளது. பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் முட்டுக்கட்டைநிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இது தொடர்பாக சபாநாயகர் அறிவித்திருந்தார்
அரசியலமைப்பு பேரவையின் நிராகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பேரவையின் ஒன்பது உறுப்பினர்களில் தம்மைத் தவிர ஐந்து பேர் உத்தேச நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனால் பேரவையின் தலைவர் என்ற ரீதியில் அதனைத் தொடர முடியாது எனவும் சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்புபேரவை என்பது பத்து உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும், ஆனால் சிறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் இன்னும் நியமிக்கப்படாததால் தற்போது அதில் ஒன்பது உறுப்பினர்களே உள்ளனர்.
சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பதவிகளின் அடிப்படையில் அதன் உறுப்பினர்களாக உள்ளனர். தவிர, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரால்நியமிக்கப்படும் தலா மூன்று பேருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூவர் சிவில் சமூகத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்றனர் .
உறுப்பினர்களிடையே போட்டியில் சமநிலை ஏற்பட்டால் மட்டுமே நியமனங்களை அங்கீகரிக்க சபாநாயகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.
தகவலறிந்த வட்டாரங்களின்படி, பிரதமர் தினேஷ் குணவர்தன, அவரது நியமனமான பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் ஜனாதிபதியின் நியமனமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் மட்டுமே ஜனாதிபதியின் பரிந்துரைக்கு ஆதரவாக உள்ளனர்.
தற்போதைய முட்டுக்கட்டையானது, மூன்று மாத காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சேவையை நீடிப்பதில் ஏற்படக்கூடிய தடங்கல் பற்றிய கவலையையும் எழுப்புகிறது. எந்தவொரு மேலதிக நீடிப்புக்கும் ஆரம்ப காலம் முடிவடைந்த பிறகு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி தேவை.