எமது வெளிவிவகாரக் கொள்கையை இந்தியாவுக்கு தெளிவாகத் தெரிவித்தோம்

எமது வெளிவிவகாரக் கொள்கையை இந்தியாவுக்கு தெளிவாகத் தெரிவித்தோம்

நாட்டு மக்களின் விருப்பத்தையும் உலக நாடுகளின் நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டதாலேயே இந்தியாவின் அழைப்பு தாங்களுக்கு கிடைத்ததாகவும் மக்களின் விருப்பமும் நம்பிக்கையும் இல்லாத தலைவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையெனவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்களின் இந்திய விஜயம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், இந்திய அரசாங்க அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, தமது கட்சியின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் மிகத் தெளிவாகத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார, அரசியல் முன்னேற்றத்திற்காக உலகில் எந்தவொரு நாட்டுடனும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கைகோர்ப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தயங்குவதில்லை எனவும் ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உலக அதிகார அரசியலுக்கு பலியாகாது எனவும் தெரிவித்தார்.

நாடு பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அவற்றை முன்னோக்கி கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு நாங்கள் செயற்பட்டு வருகிறோம். மக்களுக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டுமென நோக்கத்துடனேயே இந்தியாவின் அழைப்பை ஏற்று சென்றதாகவும் எமது நோக்கத்தில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த நாட்டு மக்களின் ஆணையும் விருப்பமும் இல்லை. நாட்டு மக்களின் ஆணையை பெற்றுள்ள ஒரு தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆவார். அத்துடன் மக்களின் விருப்பம் கொண்ட கட்சியாகவும் தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கு தெரிந்த விடயம். உள்நாட்டிலும் உலகளவிலும் மக்கள் நம்பிக்கையை வென்ற அரசியலை செய்யும் கட்சி என்ற வகையில் இந்தியா தங்களை அழைத்ததாகவும் அதற்காக சந்தோசப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுற்றுப்பயணத்தின் அனைத்து கலந்துரையாடல்கள் மற்றும் கண்காணிப்பு பயணங்கள் இந்திய அரசால் திட்டமிடப்பட்டதாகவும் பத்து நாட்களுக்கு விஜயம் மேற்கொள்ள முன்மொழியப்பட்ட போதிலும், அது ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக அரசியல் மாற்றத்துக்கு ஏற்ப தமது கட்சியும் மாறியுள்ளதாகவும் இந்தியாவும் தற்போது அந்த போக்கிலேயே செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், இந்தியாவின் அதானி மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான முதலீடுகளுக்கு முறையான டெண்டர் நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் கொள்வனவு செயல்முறை அல்லது டெண்டர் நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என்றும் அத்தகைய நடவடிக்கைகளுக்கு நாம் உடன்படவில்லை என்றும், தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் தெளிவான கொள்முதல் முறையின் கீழ் டெண்டர் நடைமுறைப் பின்பற்றப்படுமென இந்திய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )