
எதிரணியை பிளக்க பல்வேறு திட்டங்கள்; ஜே.வி.பியின் இந்திய விஜயம் ,எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கான அழைப்பின் மூலம் அரசு அரங்கேற்றி வருவதாக குற்றச்சாட்டு
ஜே.வி.பியின் இந்திய விஜயம் மற்றும் அரசாங்க நிகழ்வுகளில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அழைப்பு என்பவற்றை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவை ஏற்படுத்தி அதனை சாதகமாக பயன்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை கொண்டு எதிர்க்கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்தி அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரசாங்கம் கடந்த வாரம் எதிர்க் கட்சிகளை உடைக்கும் பல செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னர் அதன் மூலம் அரசியல் ரீதியாக சில நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்த அரசாங்கம் திட்டங்களை வகுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பங்கேற்ற காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியின் மூலம், ஐக்கிய மக்கள் சக்திக்குள் நெருக்கடியை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் காணி அமைச்சராக கடமையாற்றிய கயந்த கருணாதிலகவை இந்த நிகழ்வுக்கு அரசாங்கம் அழைத்தது. அவர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருகிறார். இதனால் அவர் அரசாங்கத்துடன் இணையப் போவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கயந்த கருணாதிலக காணி அமைச்சராக இருந்த போது காணி உறுதிகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்ததாகவும் கூறப்பட்டதுடன் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் போது காணி அமைச்சராக இருந்த எஸ்.எம்.சந்திரசேனவும் அழைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்த போதும் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் அமர்வில் பங்குபற்றியிருந்தனர். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பும் இடம்பெற்றது.
இவற்றின் மூலம் எதிர்க்கட்சிகளுக்குள் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் அரசு செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.