
ஜே.வி.பி.யினருடன் ஜெய்சங்கர் பேச்சு
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவினர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுப்படுத்துவது குறித்தும் மற்றும் பரஸ்பர நன்மைகள் குறித்தும், இலங்கை முகம்கொடுத்துள்ள பொருளாதார சவால்கள் மற்றும் அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அழைப்பையேற்றே இவர்கள் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த விஜயத்தில் அனுரகுமார திஸாநாயக்கவுடன் தேசிய மக்கள் சக்தி செயலாளரான வைத்தியர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை காலை இந்தியாவுக்கு பயணமான இவர்கள், முற்பகல் டெல்லியில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துள்ளனர்.
ஒரு மணித்தியாலத்திற்கு இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாகவும், இதன்போது இலங்கை – இந்திய உறவுகள் குறித்தும் உறவுகளை மேலும் பலப்படுத்துவதால் ஏற்படக்கூடிய பரஸ்பர நன்மைகள் குறித்தும், இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கக் கிடைத்தமை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்டை நாடு என்ற வகையில் எப்போதும் இலங்கை இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு இந்தியாவில் தங்கியிருக்கும் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவினர் அங்கு மேலும் சில அரச தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
தமது விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஊடக அறிக்கையொன்றின் ஊடாக தேசிய மக்கள் சக்தி வெளியிடவுள்ளது.