
நீதிமன்றத்தின் மீதான அரசின் அழுத்தத்தை தோற்கடிப்போம்; ஜனாதிபதியின் அதிகாரங்கள் கட்டுப்பாடுகளுக்குள்
உயர் நீதிமன்றம் உட்பட முழு நீதித்துறையின் மீதும் விடுக்கப்படும் அனைத்து விதமான அழுத்தங்களையும் தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும். அரசியலமைப்பு பேரவையானது நிறைவேற்று அதிகாரம் அல்லது வேறு எந்த நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு உட்பட்டதல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 76 ஆவது கட்டமாக, வெலிபிட்டிய,மதுராபுர அஸாபா மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் பேசுகையில்,
நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை என்பன அமைந்திருந்தாலும்,நான்காவது தூணாக, அதிகாரப்பூர்வமற்ற முறையில் சுதந்திர ஊடகம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான நிறுவனமாக அமைந்துள்ளது.
ஊடக சுதந்திரம் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.ஊடக சுதந்திரத்தின் ஊடாக ஒரு நாடு ஏகாதிபத்தியத்தை நோக்கி பயணிப்பது தவிர்க்கப்படும்.
நாட்டில் மிக உயர்ந்த அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இருப்பதாகக் கருதப்பட்டாலும்,மக்கள் போராட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தன்னிச்சையான ஆபத்தான அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் அரசியலமைப்புத் திருத்தங்கள் கூட முன்மொழியப்பட்டுள்ளன.எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி உயர் அதிகாரம் கொண்டவராக அன்றி, அவரது அதிகாரம் தடைகள் மற்றும் சமன்பாடுகளால் கட்டுப்பாடுகளுக்குட்படுத்தப்படுவதால்,அவர் விரும்பியபடி செயல்பட முடியாது.
அரசியலமைப்பு பேரவை கூட நியமிக்கப்பட்டது,முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்வதில் ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி,தன்னிச்சையாக அவர் மேற்கொள்ளும் நியமனங்களை கட்டுப்படுத்தி,இத்தகைய நியனங்களை மேற்கொள்ளும் அதுகாரத்தின் ஒரு பகுதியை அரசியலமைப்பு பேரவைக்கும்,ஜனாதிபதியின் நியமனங்களுக்கு ஒப்புதல் அல்லது நிராகரிப்பு வழங்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு பேரவை வழங்குவதன் ஊடாக,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் எல்லையற்ற அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதியின் கைப்பாவை என்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..அரசியலமைப்பு பேரவையும் அதன் உறுப்பினர்களும் கைபொம்மைகள் அல்லர்.அதன் உறுப்பினர்கள் உகந்த முடிவுகளை எடுத்து அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகளுக்கு இணங்கவே செயல்படுகின்றனர்.இது ஒரு பொம்மை அல்ல,ஜனாதிபதியின் விருப்பப்படி இப்பேரவை கட்டுப்படுத்த முடியாது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும்,ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் 3 முக்கிய தூண்கள் தங்கள் அதிகாரங்களில் நம்பிக்கையுடன் உயர் சட்டத்தின்படி ஜனநாயக ரீதியாக செயல்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரமும் சட்டவாக்கத்துறையும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நீதித்துறையில் செல்வாக்கு செலுத்த முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் செயல்படும் இயலுமை நீதித்துறைக்கு உள்ளது. இதற்கு எம்மால் வழங்க முடியுமான இயன்றளவு ஒத்துழைப்பை வழங்குவோம்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களை செலுத்த முடியாத வங்குரோத்தானதொரு நாட்டில் நாம் வாழ்கிறோம். இந்த வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கையில் நாட்டின் குறைபாடுகளை புரிந்து கொண்டு அதனை தவிர்த்து விட்டு நாட்டை புதிய வழியில் கட்டியெழுப்ப வேண்டும்.
மக்கள் எதிர்பார்க்கும் முறைமை மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்படுத்தி வருவதாகவும், ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக பாரியளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.