
ரணிலின் சார்பில் மனு: மைத்திரி, மஹிந்த உயர் நீதிமன்றத்தில்
2018 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக செயற்பாட்டளாரான ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான அடிப்படை உண்மைகளை பரிசீலித்த எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ம் திகதி அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு, பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியதாக மனுதார் கூறியுள்ளார். இதன் பின்னர் அந்த பதவிக்கு மகிந்த ராஜபக்சவை நியமித்ததாகவும் அது சட்டத்திற்கு முரணானது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை எனவும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் குறித்த மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

