
இவ்வருடம் 1,00,000 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.
ஜப்பான் மொழித் திறன் பரீட்சையில் சித்தியடைந்த 10,000 பேர் வெளிநாடுகளுக்குஅனுப்பப்படவுள்ளதாகவும், மேலும் 100,000 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைஇவ்வருடம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத்தெரிவிக்கும்போதே சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்,இருபது இலட்சம் பயனாளிகளுக்கு அஸ்வெசும என்ற சமூகப் பாதுகாப்பு நிவாரணத்தைவழங்குவதே இந்த ஆண்டு எமது முக்கியப் பணியாகும். புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் அதில் 03 இலட்சம் பேரை வலுவூட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது, பயனாளிகளுக்கு பணம் வழங்கும் செயல்முறைக்கு அப்பால், எமது முக்கிய நோக்கம் அவர்களை வலுவூட்டுவதாகும். அதற்காக தற்போதுள்ள பொறிமுறையை மாற்றவும் முடிவு செய்துள்ளோம். அந்த வகையில், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகின்றோம்.
ஜப்பான் மொழித் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 10000 பேரை தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளோம். மேலும் 100,000 பேருக்கு வெளிநாட்டு தொழில்களை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.மேலும், பயனாளிகளுக்கு தொழில்முறை பயிற்சிக்கான ஏற்பாடுகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மேம்படுத்தப்பட வேண்டும். அதன்படி, சமுர்த்திஉத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்கள் சுமார் 25,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு அவர்களின் சேவையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களில் சுமார் 2000 பேருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பதவி உயர்வு வழங்கப்படும் என்றார்.

