
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் யோசனை மூலம் ; ஜனாதிபதித் தேர்தலை நிறுத்த புதிய திட்டம்
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான யோசனையை கொண்டுவந்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தாதிருக்க ஜனாதிபதி தரப்பில் முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகங்கள் நிலவுவதாக எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு மத்தியில் நிறைவேற்று முறைமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால் அது நாட்டில் பெரும் அமைதியின்மை நிலைமைகளை ஏற்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான யோசனையை கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே சன்ன ஜயசுமன இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அதன்போது மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இயங்காது உள்ளன. இந்த நேரத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான முயற்சிகள் ஜனாதிபதி தரப்பில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த முயற்சியானது ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது இருப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என்றே கருதுகின்றோம். அடுத்ததாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அந்தத் தேர்தலையும் நடத்தாது பாராளுமன்றத்தின் காலத்தை நீடிப்பதற்கு முயற்சிக்கவும் கூடும்.
ஜனாதிபதித் தேர்தலை செப்டம்பர் 16க்கும் ஒக்டோபர் 16க்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்த வேண்டும். இந்த நேரத்தில் அவசரமாக நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கான யோசனையை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதானது தேர்தலை நடத்தாது இருப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. அது மிகவும் ஆபத்தான நிலைமையில் முடிவடையலாம். நாட்டில் பொருளாதார பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் நிலவும் நேரத்தில் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பது நாட்டில் அமைதியற்ற நிலைமைக்கு கொண்டு செல்லலாம். இதனால் அவசரமாக இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது. அவ்வாறு நிறைவேற்று முறைமையை இல்லாது செய்ய வேண்டுமாயின் நாட்டில் ஸ்தீர நிலைமையை ஏற்படுத்தி பின்னரே செய்ய வேண்டும்.
குறிப்பாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை வைத்துக்கொண்டு நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாது செய்ய போனால் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றையாட்சிக்கு பிரச்சினையாக இருக்கலாம். இதனால் நிறைவேற்று அதிகார முறைமையை இந்த நேரத்தில் இல்லாது செய்ய முயற்சிப்பது இல்லாத பிரச்சினையை உருவாக்குவதாகவே அமையும் என்றார்.

