
சிறிதரனின் வெற்றியால் தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட்டுள்ளது; விக்னேஸ்வரன் எம்.பி. மகிழ்ச்சி
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசியம் அழிந்துவிடக்கூடாது என்பதில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக சிவஞானம் சிறிதரன் வெற்றிபெற்றுள்ளமை தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.சக போட்டியாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அனைத்து தகுதிகள் இருந்தாலும் அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆபத்து என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அதனையே இந்தத் தலைவர் தெரிவுக்கான தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தியுள்ளன.
எனது இந்தக் கருத்தையே இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களும் கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது.தமிழ் தேசியம் அழிந்து விடக்கூடாது என்ற நிலைப் பாட்டிலேயே அவர்கள் வாக்களித்துள்ளனர்.
தமிழ் தேசியம் அழிந்துவிடக் கூடாது,தமிழர் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் ,தமிழர் உரிமைகள் கலை ,கலாசாரம் , பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சிறிதரன் மிகவும் உறுதியான நிலைப்பாடு கொண்டவர் .அந்த உணர்வு அதிகம் கொண்டவர் .அதனால்தான் சிறிதரன் வெற்றி பெற வேண்டும் என நான் விரும்பினேன். அதுவே நடந்துள்ளது மகிழ்ச்சி.
எனவே சுமந்திரன் எம்.பி.க்கு வாக்களித்தவர்களும், தமிழ் தேசியத்திற்காகவே பலரும் வாக்களித்துள்ளார்கள் என்பதனை புரிந்து கொண்டு தலைவர் சிறிதரனுடன் இணைந்து செயற்பட வேண்டும். அவரை இன்னும் பலப்படுத்த வேண்டும்.
சிறிதரனின் வெற்றி மூலம் தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் தேசியத்திற்காக இலங்கை தமிழரசுக்கட்சி இன்னும் உத்வேகத்துடன் செயற்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்றார்.

