
உணவுகளின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கும்; உணவு விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிப்பு
மரக்கறி வகைகள் உள்ளிட்ட உணவுக்கான பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் விழா மண்டபங்களில் உணவு விலைகளை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை விழா மண்டபங்கள் மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி அந்த சங்கத்தின் தலைவர் சாலிய ரவிந்திர இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
அவர் அந்த செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,
தற்போதைய நிலைமையில் சிற்றுண்டிசாலைகள், ஹோட்டல்கள், விழா மண்டபங்களில் 50 வீதமானவை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கரட் உள்ளிட்ட மரக்கறி வகைகள் மாத்திரமன்றி உணவுக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதனால் விழா மண்டபங்கள், உணவு விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடையவர்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர். இந்த வாரத்தில் அவர்கள் எந்த வேலைகளையும் செய்யாது அவற்றை மூடி வைத்துள்ளனர். எனினும் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம்.
இவ்வாறான நிலைமையில் இதுவரையில் ஏற்றுக்கொண்ட நிகழ்வுகளுக்கு ஏற்றுக்கொண்ட உணவுகளுக்கு 5 வீத விலை அதிகரிப்பையும், புதிதாக ஏற்றுக்கொள்ளப்படும் நிகழ்வுகளுக்கு 10 வீத விலை அதிகரிப்பையும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். நாங்களும் ஏதோவொரு வகையில் நுகர்வோராகவே இருக்கின்றோம். எங்களுக்கும் செலவுகள் உள்ளன. இதனால் விலை மற்றும் கட்டணங்களை நாங்கள் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

