கடந்த மூன்று வருடத்தில் நுண்கடன் திட்டத்தினால் 200 க்கும் அதிகமான பெண்கள் தற்கொலை; 28 இலட்சம் பேர் மிக மோசமாகப் பாதிப்பு

கடந்த மூன்று வருடத்தில் நுண்கடன் திட்டத்தினால் 200 க்கும் அதிகமான பெண்கள் தற்கொலை; 28 இலட்சம் பேர் மிக மோசமாகப் பாதிப்பு

கடந்த மூன்று வருட காலமாக நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துள்ளார்கள். வாழ்க்கைக்கு பதிலாக மரணத்தை அழைக்கும் வகையில் நுண்கடன் திட்டங்கள் இன்று சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன. நாட்டில் ஒட்டுமொத்த சனத்தொகையில் சுமார் 28 இலட்சம் பேர் நுண்கடன் திட்டங்களினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சுயாதீன எதிரணி எம்.பி.யான காமினி வலபொட தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை கடன் வழங்கும் நிறுவனங்களை கடுமையாக ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு உட்படுத்துதல் தொடர்பிலான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

நுண்கடன் திட்டங்கள் மற்றும் குறுகிய கடன் வழங்குநர்கள் தொடர்பில் ஆராயும் பொறுப்பில் இருந்து மத்திய வங்கி விலகியுள்ளது.நாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக நுண்கடன் திட்ட நிறுவனங்கள் உள்ள நிலையில் 5 நிறுவனங்கள் மாத்திரமே பதிவு செய்துள்ளன.ஏனைய நிறுவனங்கள் தமது விருப்பத்துக்கு அமைய வட்டிகளை தீர்மானித்துக் கொள்கிறார்கள்.பொருளாதார சுமையில் உள்ளவர்கள் அதில் அகப்பட்டு விடுபட முடியாத அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.

வாழ்க்கைக்கு பதிலாக மரணத்தை அழைக்கும் வகையில் நுண்கடன் திட்டங்கள் இன்று சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள பின்தங்கிய கிராம புறங்களை இந்த நுண்கடன் திட்டங்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்த நிதி நிறுவனங்கள் நூற்றுக்கு 120 ரூபா வரை வட்டி அறவிடுகிறார்கள்.நாட்டில் ஒட்டுமொத்த சனத்தொகையில் சுமார் 28 இலட்சம் பேர் நுண்கடன் திட்டங்களினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் நுண்கடன் கொடுமைகள் தொடர்பில் சர்வதேச நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் சாட்சியமளித்த ஒரு பெண் ‘கடன் தவணை சேகரிப்பாளர் வீட்டுக்கு வரும் போது என் கணவர் வீட்டில் இருந்து வெளியே செல்வார்.தவணையை பெற்றுக்கொள்வதற்கு வரும் தினம் மற்றும் நேரத்தை அவர் எனக்கு தொலைபேசியில் குறிப்பிடுவார்.நான் அதை என் கணவரிடம் குறிப்பிடுவேன்.அவரும் தலை குனிந்து,நிலத்தை பார்த்தவாறு வீட்டை விட்டு வெளியேறுவார்.இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னரே கணவர் வீட்டுக்கு வருவார்.ஐந்து தவணைகளை அவ்வாறே செலுத்தினேன்.நேர்ந்தது என்ன ? என்பதை எங்களால் ஊகிக்க கூட முடியவில்லை. என்று கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருட காலமாக நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துள்ளார்கள்.இதற்கு மத்திய வங்கி பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )