ராஜபக்‌ஷக்கள், மைத்திரிபால போன்று நாங்கள் வந்தால் ரணில் குற்றவாளி; அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வருடமே இது

ராஜபக்‌ஷக்கள், மைத்திரிபால போன்று நாங்கள் வந்தால் ரணில் குற்றவாளி; அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வருடமே இது

ராஜபக்‌ஷக்கள், மைத்திரிபால சிறிசேன போன்று ரணில் விக்கிரமசிங்கவும் குற்றவாளியே என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விசாரிக்கப்படும் வழக்கில் அவர் குற்றவாளியாவார் என்றும் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட மகளிர் மாநாட்டில் உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.

அந்த மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

2024ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வருடமாகவே இருக்கும். இந்த மாற்றம் எமது வெற்றியாகவே இருக்கும். எமது நாடும் மக்களும் வரலாற்றில் ஒருபோதுமில்லாதளவுக்கு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவில் பெண்களே பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இதனால் பெண்களும் தலையிட்டு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளது. நாட்டை சிங்கப்பூர் போன்று மாற்றுவதாகவும், ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவோம் என்றும் அரசியல்வாதிகள் கூறினர். அவ்வாறு கூறி மக்கள் ஏமாற்றப்பட்டனர். இப்போது வங்குரோத்தடைந்த நாடாக மாறியுள்ளது. இப்போது திறைசேரியில் பணமில்லாது வற் வரியை அதிகரித்துள்ளதுடன், மேலும் பல பொருட்களுக்கும் வரிகளை அறவிடுகின்றனர். 38 வருடங்களாக வற் வரி இல்லாத பொருட்களுக்கு இப்போது வரி அறவிடப்படுகின்றது.

ஜனவரி முதலாம் திகதிக்கு முன்பிருந்ததை விடவும் முதலாம் திகதிக்கு பின்னர் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு முறையாக கல்வியை கொடுக்க முடியாவிட்டால், நோய் வந்தால் மருந்து எடுக்க முடியாது என்றால் வாழ்க்கையில் என்ன பயன். கடினமான பொருளாதார நிலைமையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசியல் மாற்றத்திற்கான இடமாக தேசிய மக்கள் சக்தியே இருக்கின்றது. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றுவோம்.

எந்தவொரு மேடையிலும் மற்றைய கட்சியினர் தேசிய மக்கள் சக்தி தொடர்பிலேயே கதைக்கின்றனர். அவர்களின் எதிரியாக நாங்களே தெரிகின்றோம். நாங்கள் அரசாங்கத்தை எடுப்பது தொடர்பாகவே கதைக்கின்றனர். சஜித் பிரேமதாச அரசாங்கத்தை அமைத்தால் இங்கே அரசாங்கத்தில் இருக்கப் போவது யார்? மகிந்த ஆட்சியில் இருந்த சந்திம வீரக்கொடி, சான் விஜேலால் போன்றவர்களே இருப்பார்கள். இது மாற்றமல்ல.

எவ்வாறாயினும் புதிய தரப்பினரிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க வேண்டும். அதற்கு தேசிய மக்கள் சக்தியே பொருத்தமாக இருக்கும். இது வீழ்ச்சியடைந்துள்ள நாடே. இந்த நாட்டை பொறுப்பேற்பது அச்சுறுத்தலானதே. அதனைக் கொண்டு நடத்துவது கடினமானதாகவே இருக்கும். எனினும் இந்த நேரத்திலாவது இந்த அழிவுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மீட்க முடியாமல் போகும். புதிய சிந்ததையுடன் மக்களின் புத்தெழுச்சியே இப்போது தேவையாக உள்ளது.

மோசடிக்காரர்கள், போதைப் பொருள்காரர்கள், குற்றவாளிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்க வேண்டும். மகிந்த ராஜபக்‌ஷ உயர் நீதிமன்றத்தின் முன் குற்றவாளியே, மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்தின் முன்னால் குற்றவாளியே. அதேபோன்று ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியினால் வழக்கு விசாரிக்கப்படும் போது குற்றவாளியாவார். இவ்வாறான குற்றவாளிகளிடமிருந்து நாட்டை மீட்க வேண்டும்.

செப்டம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் பாராளுமன்றமும் கலைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. எந்தத் தேர்தல் நடந்தாலும் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாவதால் தீர்மானங்களை எடுக்க முடியாத நிலைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளார். அவர் பயப்படுவதால் பாராளுமன்ற தேர்தல் முதலில் நடக்கலாம். எந்தத் தேர்தல் நடந்தாலும் தேசிய மக்கள் சக்தி அதற்கு தயாரே என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )