
தற்கொலையை தூண்டும் வகையில் மதப் பிரச்சாரம்; ஏழுவர் பலி: குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துரித விசாரணை.
சயனைட் என சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட ருவான் பிரசன்ன குணரத்னவின் சமயப் பிரச்சாரங்கள் மற்றும் அதில் கலந்துகொண்டவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்தவர்கள் தற்கொலைக்கு பயன்படுத்திய சயனைட் என சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக அரசாங்க ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமயப் பிரச்சாரங்களில் கலந்து கொண்ட இளம் பெண் மற்றும் இளைஞன் உட்பட ஆறு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
முகநூல், சமூக ஊடகங்கள், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமய சமயப் பிரச்சாரங்களை நிகழ்த்திய ருவான் பிரசன்ன குணரத்ன மற்றும் அவரது போதனைகள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்த சமயப் பிரச்சாரங்களை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்ன, அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் மற்றும் அவரது பிரச்சாரங்களில் கலந்துகொண்ட இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.
ருவான் பிரசன்ன குணரத்ன தனது உரைகளில் மரணம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பல்வேறு பேச்சுக்களைக் கொடுத்து தன்னைப் பின்பற்றுபவர்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த பிரச்சாரம் இடம்பெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு, கொட்டாவ, மகும்புரவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ருவான் பிரசன்ன குணரத்ன தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் தற்கொலை செய்துகொண்டனர்.
அம்பலாங்கொட திலகபுர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரும், இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட யக்கல – ரபல்வத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவியும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த ஏழு மரணங்களும் சயனைட் என சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருட்களை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், பிரச்சாரங்களை வழங்கிய ருவான் பிரசன்ன குணரத்னவே அதனை வழங்கியிருக்கலாம் எனவும் பொலிஸார் கருதுகின்றனர்.
ருவான் பிரசன்ன குணரத்ன பிரதான வைத்தியசாலையொன்றின் ஆய்வகத்தில் பணிபுரிந்ததாகவும், அங்கு அவர் இந்த இரசாயனங்களை தயாரித்துள்ளதாக நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரசாயனங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் உயிரிழ்ந்தவர்களின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

