தமிழ் வேட்பாளரின் பின்னணியில் ரணில்

தமிழ் வேட்பாளரின் பின்னணியில் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் .என்ற விடயத்திற்கு,தெற்கிலுள்ள பேரினவாத சக்திகள் அதிக முக்கியத்துவம் வழங்குவதன் மூலம்,அதனை பிரபல்யப்படுத்த முனைவது தெளிவாகின்றது.தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் பேசுபொருளாக்கி நாடிபிடித்துப் பார்க்கும் தந்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரங்கேற்றியிருக்கலாமெனதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன் சந்தேகம் தெரிவித்தார்.

யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தை மிகவும் பேசும் பொருளாக மாற்றுவதற்கு அரசாங்கமும்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முயற்சிக்கின்றனர்.இதற்கு பின்னணியில் உள்ள விடயங்கள் குறித்து நாம் பேசியாக வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதென்பது தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு.ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளின்றி தனியாக சிங்கள மக்களின் வாக்குகளினால் மட்டும் ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படலாம் என்னும் நிலை காணப்படும் போது, தமிழர் தரப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தி இனப்பிரச்சினை குறித்த தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன்னிறுத்தி அதற்கு ஆணைகோரும் சர்வஜன வாக்கெடுப்பாகப் பயன்படுத்தலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து .

எல்லோரும் இணைந்து கோரும் பட்சத்தில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடத் தயாரென,முன்னாள் நீதியரசரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டார். விக்னேஸ்வரன் ஐயாவின் கடந்த ஒன்றரை வருடகால செயற்பாடுகளை அவதானித்தால், 2022ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டபோது ஆதரவாக வாக்களித்தார்.

தொடர்ந்து ஜனாதிபதி நடத்திய சர்வகட்சி மாநாட்டில், விக்னேஸ்வரன் ஐயாவின் கையிலும் ஜனாதிபதியின் கையிலும் பேசப்படப்போகு ம் விடயம் தொடர்பில் ஒரே ஆவணம் இருந்தது.இது அவர்கள் இருவருக்குமான நெருங்கிய உறவை வெளிப்படுத்துகின்றது.

பாராளுமன்ற வாக்கெடுப்புகளின் போதெல்லாம் ஒன்றில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருப்பார்.இல்லாது விடின் ஆதரவாக வாக்களித்திருந்தார். ஒருபோதும்அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்திருக்கவில்லை.அண்மையில் ஜனாதிபதி அழைத்த கூட்டத்திற்கு,மக்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லையென்ற காரணத்தினால்,தான் கலந்துகொள்ளவில்லையென அவர்அறிவித்திருந்தார்.இதன் மூலம் தான் ஜனாதிபதிக்கு எதிரானவர் என்பதை மக்களுக்கு காட்டுவதற்கு அவர்முற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது.இத்தகைய பின்னணியிலேயே தமிழ் பொதுவேட்பாளராகஅழைத்தால் போட்டியிடத் தயாரென அவர் கூறியதைப் பார்க்க வேண்டியுள்ளது.

தற்போதைய அரசியல் சூழலில்,பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால் பெரும்பான்மையின சிங்கள மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக கூற வேண்டும்.அவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி ஆதரவுடன் மொட்டுக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்குவதற்கு வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவு இல்லையென்பது உறுதி.அதேபோன்று இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள தமிழ் பேசும் மக்களின் வாக்குகளும் அவருக்கு கிடைப்பது சந்தேகம்.

இந் நிலையில்,தமிழ் மக்களின் வாக்குகள் இன்னுமொரு வேட்பாளருக்கு போகாது தடுக்கும் நோக்கில் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் கையிலெடுக்கப் பட்டிருக்கலாமென்ற சந்தேகம் எழுகின்றது.தமிழ் பொது வேட்பாளர் கணிசமான தமிழ் வாக்குகளைப் பிரிக்கும் பட்சத்தில்,பெரும்பான்மையின சிங்கள வாக்குகள் மூன்றாகப் பிளவுபடும் நிலை ஏற்பட்டு,அவர்களுக்குள் போட்டியிடும் நிலை உருவாகும். இத்தகைய பின்னணியிலேயே, தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் பேசுபொருளாக்கி நாடிபிடித்துப் பார்க்கும் தந்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரங்கேற்றியிருக்கலாமென சந்தேகிக்கின்றோம்.

தமிழ் பொதுவேட்பாளரை துரும்புச் சீட்டாகப் பயன்படுத்த வேண்டுமென்ற விடயம், இன்றைய சூழலில் பொருத்தப்பாடற்ற நிலையாகவே உள்ளது.தமிழ் மக்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதியாக யார் வருவார்கள் என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருக்கின்றது.இந்தப் பின்னணியில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் பேசுபவர்கள் தொடர்பில் நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதுடன்,அவர்களது உள்நோக்கங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )