15,222 பேர் கைது; சிறைக்கு இடம் தேடும் அரசு

15,222 பேர் கைது; சிறைக்கு இடம் தேடும் அரசு

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களை இலக்கு வைத்து நாடு முழுவதும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறைச்சாலைகள் நிரம்பியுள்ளன.

இதன் காரணமாக சிறைக்கைதிகளை அரசாங்கத்திற்கு சொந்தமான வெற்று கட்டிடங்களில் தங்க வைக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘ஜஸ்டிஸ் ஒப்பரேஷன்’ தொடங்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் உள்ள 28 சிறைகளில் 2250க்கும் மேற்பட்ட புதிய கைதிகள் சேர்ந்துள்ளனர்.

சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு, நாட்டின் சிறைச்சாலைகளில் 28,000 கைதிகள் மட்டுமே இருந்தனர். இந்த சிறைச்சாலைகளில் 11,000 பேரை மட்டுமே அடைக்க முடியும்.

எனினும் தற்போதைய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் காரணமாக தினசரி அதிகளவு சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதால் அதிகமானோர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

கடந்த 17ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 15,222 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 755 பேர் தடுப்பு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் 1,134 சந்தேக நபர்கள் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். 177 சந்தேக நபர்களுக்கு எதிராக சொத்து விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 1,467 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு 460 கிராம் ஹெரோயின், 653 கிராம் ஐஸ் போதைப்பொருள், 03 கிலோ 637 கிராம் கஞ்சா, 103,793 கஞ்சா செடிகள், 342 கிராம் மாவா மற்றும் 562 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

56 சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் போதைக்கு அடிமையான 51 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )