ஜனாதிபதித் தேர்தலில் எவரும் 50 வீத வாக்குப் பெறுவதை தமிழர்கள் தடுக்க வேண்டும்; எம்மவர் ஒருவரை களமிறக்க வேண்டும்

ஜனாதிபதித் தேர்தலில் எவரும் 50 வீத வாக்குப் பெறுவதை தமிழர்கள் தடுக்க வேண்டும்; எம்மவர் ஒருவரை களமிறக்க வேண்டும்

வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலிலே வடகிழக்கிலே மக்கள் நன்கு அறிந்த ஒரு தமிழரை நிறுத்தி அனைத்து தமிழரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும். இது வெற்றி பெறவைக்க வேண்டும் என்பதற்கு அல்ல, இந்த நிலை ஏற்பட்டால் தெற்கிலே எந்தவொரு வேட்பாளராலும் 50 வீதத்தை எட்டமுடியாது. ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகும். அப்போது தமிழர்களின் இரண்டாவது வாக்கு தேவைப்படும். அப்போது சர்வதேசத்தின் உதவியுடன், நாம் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளலாம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

சித்த வைத்தியர் கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம் எழுதிய “வீட்டு வைத்தியம்” , “வாஸ்து சாஸ்த்திரம்” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்,

ஆரம்பத்திலே எமது தலைவர்கள் சமஷ்டி கேட்டுப் போராடினார்கள். பின்னர் ஆயுதப் போராட்டம், பின்னர் 2009 இல் அப்போராட்டம் மௌனிக்கப்பட்டது. மீண்டும் சமஷ்டியை நோக்கி தமிழ் தலைவர்கள் போராடிக் கொண்டு வருகின்றார்கள். இது கிடைக்காவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது. எமது அடுத்த தலைமுறை தொடர்சியாக அடக்குமுறைக்குள் வாழமாட்டார்கள். ஏனெனில் இந்த நாட்டில் மூத்த குடிகள் நாங்கள்.

எதிர்வரும் ஆண்டு ஓர் தேர்தல் ஆண்டாக இருக்கப் போகின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நிறுத்தியதுபோல் ஜனாதிபதித தேர்தலை நிறுத்த முடியாது. இதற்கு மொட்டுக் கட்சியினர் தடைபோட்டால் பொதுத் தேர்தல் நடைபெறலாம்.

எங்களுடைய விருப்பம் ஜனாதிபதித் தேர்தலாகும். தமிழர் ஒருவர் இந்த நாட்டிலே ஜனாதிபதியாக வரமுடியாது. அதுவும் இந்த நாட்டிலே எழுதப்படாத சட்டம். பௌத்த மதத்தைத் தழுவாத ஒருவர் நாட்டிலே ஜனாதிபதியாக வரமுடியாது. கடந்த காலத்தில் பண்டாரநாயக்க கிறிஸ்தவ மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறித்தான் அரச தலைவராக வந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். அது இந்த அரசியல் சூழ்நிலையில் எம்மை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. முரண்பட்ட கட்சிகள் அனைத்தும் 2001 இல் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி 2009 வரைக்கும் தமிழர்கள் மிகவும் ஒற்றுமையாக சர்வதேசத்திற்குக் காட்டினார்கள். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் 22 உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி நாட்டுக்கு மாத்திரமின்றி சர்வதேசத்திற்கும் எமது ஒற்றுமையை எடுத்துக் காட்டினார்கள். அந்த நிலைமை மீண்டும் உருவாக வேண்டும்.

வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலிலே, வடகிழக்கிலே மக்கள் நன்கு அறிந்த ஒரு தமிழரை நிறுத்தி அனைத்து தமிழரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும். இது,அவரை வெற்றி பெறவைக்க வேண்டும் என்பதற்கு அல்ல. இந்த நிலை ஏற்பட்டால் தெற்கிலே எந்தவொரு வேட்பாளராலும் 50 வீத வாக்கை எட்டமுடியாது ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகும். அப்போது தமிழர்களின் இரண்டாவது வாக்கு தேவைப்படும். அப்போது சர்வதேசத்தின் உதவியுடன், நாம் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளலாம். அப்போதுதான் தமிழர்களின் ஒன்றுமை நிலைநாட்டப்பட்டிருப்பது சர்வதேசத்திற்குத் தெரியவரும்.

இதுதொடர்பில் தமிழ் கட்சிகள் பேசிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பில் இன்னும் நிரந்தர உடன்பாடு வரவில்லை. அப்போததான் எமக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைத்து மக்களின் தேவைகளும் நிவர்த்தி செய்யப்படும்.

2009 இல் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றார்கள், தற்போது மௌனயுத்தத்தின் மூலம் காணி அபகரிப்பு, பௌத்தமயமாக்கலுடன் எமது குடிப்பரம்பலை குறைப்பதற்காக வேலைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

அரசாங்கம், ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் எங்களுடன் நன்றாகப் பேசுகின்றார்கள். பேசிவிட்டு பின்கதவால் அதிகாரிகள் மத்தியில், நீங்கள் செய்வதைச் செய்யுங்கள் எனத் தெரிவிக்கின்றார்கள். இந்த நிலைமை மாறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )