
வடக்கில் கழுத்தில் சயனைட் குப்பிகளுடன் வந்த சிறுவர்கள்
வடக்கு மாவீரர் தின நிகழ்வில் சிறுவர்களுக்கு விடுதலைப் புலிகளைப்போல் சீருடையணிவித்து,அவர்களின் கழுத்தில் சைனைட் குப்பிகளை அணிவித்தமை முற்றிலும் வெறுத்தக்கத்த செயற்பாடு என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
கிரிக்கெட் தொடர்பில் மாத்திரம் இந்த சபையில் அதிகம் பேசப்படுகிறது.ஆனால் கிரிக்கெட்டைவிடவும் நாட்டில் பல முக்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கல்முனை பகுதியில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் 15 வயது சிறுவன் அந்த நிலையத்தின் கட்டுப்பாட்டாளரினால் மிக கொடுமையான நிலையில் தாக்கப்பட்டதை தொடர்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.இந்த செய்தியை அறிந்து மனவேதனையடைந்தேன்.
கடந்த மாதம் மாத்திரம் 16 வயதுக்கு குறைவான 131 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோக கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.இவர்களில் 10 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இவ்விரு செய்திகளும் மிகவும் கொடுமையானவை .
கடந்த வாரம் வடக்கில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடைக்கு ஒத்த சீருடைகளை சிறுவர்களுக்கு அணிவித்ததுடன் அவர்களின் கழுத்தில் சைனட் குப்பிகளை அணிவிப்பதையும் காண முடிந்தது.இது முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடு.யுத்தக் காலத்தில் பல சிறுவர்கள் போராளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.அந்த நினைவுகளை மீட்கும் வகையில் செயற்படுவது முறையற்றது.
அரசியலமைப்பின் சமவுரிமை,பெண் சமத்துவம் தொடர்பில் பேசப்படுகிறது.ஆனால் பாரம்பரிய சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுவதால் பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்படுவதில்லை.அனுதாரபுரத்திலும்,கண்டியிலும் மாவட்ட செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படவில்லை.பத்தினி தெய்வம் ஒரு பெண். ஆனால் கோயில் கருவறைக்குள் செல்வதற்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.இந்த நிலைமை மாறவேண்டும்.
முப்படைகளில் பெண்கள் உள்ளார்கள்.கடற்படையில் இதுவரை காலமும் ஆண்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட பதவி நிலை தற்போது பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.இராணுவத்தில் பெண்கள் 40 அல்லது 20 வருடங்கள் சேவையில் இருக்க முடியும்.இராணுவத்தில் மேஜர் பதவி மாத்திரம் பெண்களுக்கு வழங்கப்படும்.இந்த நிலைமையை மாற்றியமைக்க சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது என்றார்.

