
சர்வதேச மாநாடு ஒன்றில் பங்குப்பற்றிய இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள்
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான மூன்றாவது சர்வதேச மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து காணாமல் போனவர்களின் சுமார் 700 குடும்பங்கள் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாடு கடந்த 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் இலங்கையில் இருந்தும் பலர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத மோதல்கள், இடம்பெயர்வு அல்லது பிற வன்முறைச் சூழ்நிலைகளால் காணாமல் போனவர்களின் குடும்பங்களை இந்த மாநாடு ஒன்றிணைத்திருந்தது.
இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களைச் சேர்ந்த காணாமல் போனவர்களின் 37 குடும்பங்கள் கொழும்பு, வவுனியா மற்றும் மட்டக்களப்பில் இருந்து மாநாட்டில் கலந்துகொண்டன.
இதன் போது தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவும், மற்ற நாடுகளைச் சேர்ந்த குடும்பங்களுடன் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 44 மாநாட்டு மையங்கள் மூலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்கள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தியது.
உலகெங்கிலும் உள்ள மற்றவர்கள் நிச்சயமற்ற தன்மையை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், சவால்களை எவ்வாறு புரிந்துகொள்வது, அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு சேவைகள் மற்றும் குடும்பங்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவ முடியும் என்பதைப் பற்றி அறிந்துகொள்ள இந்த மாநாடு வாய்ப்பாக அமைந்தது.
இராஜதந்திர மட்டத்தில் காணாமற்போனோர் விவகாரம் தொடர்பாக வாதிடுவதற்காக 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 12 உறுப்பு நாடுகளின் குழுவான காணாமல் போனோருக்கான உலகளாவிய கூட்டமைப்புடன் கலந்துரையாடும் வாய்ப்பும் பங்குபற்றிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
காணாமல் போனவர்களின் தேடுதல் பணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களை கண்ணியமாக நடத்த வேண்டியதன் அவசியம் பற்றிய பதில்களை வழங்க வேண்டியதன் அவசியத்தை இம்மாநாடு எடுத்துரைத்தது.
தேசிய மற்றும் உலகளாவிய நிகழ்ச்சி நிரல்களில் காணாமற்போனோர் தொடர்பான விடயம் தொடர்வதன் முக்கியத்துவமும் இந்த மாநாட்டின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
கடந்த ஐந்து தசாப்தங்களாக, குறிப்பாக உள்நாட்டுப் போரின் போது, பல கிளர்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போனதை இலங்கை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

