
தடைகளுக்கு மத்தியில் உணர்வெழுச்சிச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்
திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
மாவீரர் நாளான இன்று அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி
யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 51ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் செய்ய நீதிமன்றம் அனுமதி
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்;தல் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொடிகள் படங்கள் பயன்படுத்த கூடாது இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று நினைவேந்தல் செய்வதை தடைசெய்ய கோரி வாழைச்சேனை, வவுணதீவு, சந்திவெளி, கொக்கட்டிச்சோலை, வாகரை, பொலிஸார் இன்நாள் முன்னாள் நா.உறுப்பினர்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் உட்பட ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் தலா 20 பேருக்கு எதிராக மட்டக்களப்பு , வாழைச்சேனை, நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தனர்
இந்த நிலையில், இந்த தடை உத்தரவுக்கு எதிராக இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், கட்சி தேசிய அமைப்பாள் த.சுரேஸ், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன் உட்படவர்கள் சிரேஷ;ட சட்டத்தரணி பிறேம்நாத், விஜயகுமார் உட்பட 7 சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றில் முன்நகர்வு பத்திரம் விண்ணப்பித்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் செய்ய உரிமையுண்டு எனவும் குறித்த மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் சுயமாக நினைவேந்தலை அனுஸ்டிக்க முடியம் எனவும் அதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சின்னங்கள்,கொடிகள், புகைப்படங்கள் பயன்படுத்தகூடாது எனவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
எனவே மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு வருகை தந்து நினைவேந்தலில் அலை அலையாக திரண்டு ஈடுபடுமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்று நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றிலும் , வல்வெட்டித்துறை , பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றிலும் , ஊர்காவற்துறை பொலிஸாரினால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணைகளை அடுத்து , அந்த அந்த நீதிமன்றங்களினால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை சுன்னாகம் , அச்சுவேலி மற்றும் தெல்லிப்பளை பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சுற்றுவட்டப் பாதையில் மாவீரர் நாள் பதாகையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
“எம் மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போக கூடாது. ஆகவே விழித்தெழு இளம் தலைமுறையே .. போதை வஸ்துக்களில் இருந்தும், வன்முறை சமூகத்தில் இருந்தும் விழித்தெழுந்து, அறிவாயுதத்தை பயன்படுத்து” என பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்.இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள சுற்றுவட்ட பாதையில் ” மாவீரர் நாள் என பதாகை கட்டப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடியுடன் மேலும் சில பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.


யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலி
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை (27) காலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
-அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் குறித்த இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

