
யாழில் பொலிஸார் தாக்குதல் இளைஞன் உயிரிழப்பு; கடும் தாக்குதலால் மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனையில் தகவல்
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டதாலும் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் அதிகளவான பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி அடித்து, சித்திரவதை புரிந்ததுடன், பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பையொன்றினால் முகத்தை மூடி சித்திரவதை புரிந்தனர் என, பொலிஸாரினால் சித்திரவதையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் இளைஞன் வைத்தியசாலையில் கூறிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் தான் இளைஞன் உயிரிழந்துள்ளார் என குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞன் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது, தனக்கு நடந்த சித்திரவதை தொடர்பில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அதில் ” என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள். துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள்.
பின்னர் எனக்கு குடிக்க மது தந்தார்கள். தாக்குதல்கள் சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்ல கூடாது என கடுமையாக என்னை மிரட்டினார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுன்னாகம், மானிப்பாய், இளவாலை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
உயிரிழந்த இளைஞனுக்கு நீதி வழங்காமல் கண்துடைப்பாக சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வெறுமனே இடமாற்றம் வழங்கிவிட்டு பொலிஸார் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட மருத்துவ அறிக்கை
இதேவேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை நண்பகல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியலில் கைதியின் உயிரிழப்பு இயற்கை மரணம் அல்ல எனத் தெரிவித்த யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை இந்த இளைஞனின் உடலில் காயங்கள் இருப்பதையும் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாது இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் மேலதிக பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இரு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.