
அக்கினி
ஐந்தில் ஒன்றானவள்…..
பாரதியின் வரியில்
அக்கினிக்குஞ்சானவள்!
அக்கினிச் சிறகாய் பறந்தாய்
அப்துல் கலாம் எழுத்தில்.
வள்ளலாரின்
ஒளி வடிவம் ஆனாய்.
கண்ணகியின்
தோழியாய் நின்று
அநீதியை அழித்தவள்!
சீதையின்
கற்பை காத்தவள்!
நீரில் அசுத்தம் கலந்தால்
அசுத்த நீராகும்….
காற்றில் மாசு கலந்தால்
காற்று மாசாகும்…..
நிலத்தில்
நெகிழியை போட்டால்…
நிலமும் கெட்டுப் போகும்!
வாகனப் புகையால்…
ஓசோனும்
தன்தன்மையை இழக்கும்!
ஆனால்
அக்கினி நீயோ..
உன்னில்
எது விழுந்தாலும்
நீ நீயாகவே இருப்பாய்!!
உன்னை நேசிக்க,
ரசிக்க
இதுவே காரணம்.
ஒரு
எரிகின்ற விளக்கால்
மட்டுமே
மற்றொரு விளக்கை
ஏற்ற முடியும்!!
அக்கினி போல்
நாமும்
அநீதியை அழித்து
அனைவரின் வாழ்விலும்
சிறு ஒளியாய் இருப்போம்!!
-முல்லை பாஸ்கர்
CATEGORIES இலக்கியம்