
மனிதப் புதைகுழிகள் உண்மைகளை புதைக்குமா?
1983 இல் ஒரு துக்கமான தினத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி தனது வாழ்நாளில் கடைசியாக கணவனைப் பார்த்தார். ஆனால் அந்த நாளுக்குப் பிறகும் ஒரு நாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன்அவர் பொட்டு அணிந்திருக்கிறார் . நாற்பது வருடங்கள் கழித்து இந்த பொட்டு அவரின் வாழ்க்கைக்கு சுமையாக மாறிவிட்டது.
இந்த பொட்டை இடுவதில் அவருக்கு எந்த நோக்கமும் இல்லை, ஆனால் அவர் கணவன் ஒரு நாள் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கிறார் . இலங்கையில் இடம்பெற்ற 30 வருட இனமோதல் மற்றும் அரசியல் கிளர்ச்சிகளின் போது தமது அன்புக்குரியவர்களை இழந்த பல விதவைகள், பிள்ளைகள் மற்றும் தனிநபர்களின் அவல நிலை இதுவாகும். யுத்தம் முடிவடைந்து, இலங்கை சமாதானத்தை அடைந்துவிட்டது என்று சொல்லப்பட்டாலும், பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
இவற்றில் ஒன்று நாடு முழுவதும் கண்டுபிடிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மனிதப் புதைகுழிகள் ஆகும். சோபி பிஸ்பிங்கின் ‘இலங்கையில் மனிதப் புதைகுழிகள்: வரலாறு மற்றும் சட்டக் கட்டமைப்பு’ என்ற தலைப்பிலான சமீபத்திய அறிக்கை, 1992 மற்றும் 2022 க்கு இடையில் 32 பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதை வெளிப்படுத்துகிறது. இது துன்பமான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
ருவின் டி சில்வா இயக்கிய 30 நிமிட ஆவணப்படமான ‘இன் ப்ளைன் சைட்’ வெளியானதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது, இது இலங்கையில் பாரிய புதைகுழிகள் மற்றும் தோல்வியுற்ற தோண்டியெடுத்தல் பிரச்சினையின் சிக்கலான தன்மையை கோடிட்டுக் காட்டுகிறது. பட்டியலிடப்பட்டுள்ள 32 புதைகுழிகளில் இதுவரை ஏழு கல்லறைகள் மட்டுமே தோண்டப்பட்டதாக அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
சூரியகந்த, செம்மணி, யாழ்ப்பாணம், மாத்தளை, களவாஞ்சிக்குடி ஆகிய இடங்களில் உள்ள புதைகுழிகளும் மன்னாரில் உள்ள இரண்டு இடங்களும் இதில் அடங்கும். வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் உள்ள மக்கள் பல வருடங்களாக, தமது அன்புக்குரியவர்கள் காணாமல் போனமை தொடர்பில் பதில்களுக்காக ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். மனிதப் புதைகுழிகளில் பலியானவர்களில் சிலர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று அடிக்கடி சந்தேகிக்கப்படுகிறது.

வலுக்கட்டாயமாக அல்லது சுய விருப்பமில்லாமல் காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. 1983 ஆம் ஆண்டு யுத்தம் தொடங்கியதில் இருந்து 60,000 முதல் 100,000 பேர் வரை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் எவ்வாறு புதைக்கப்பட்டவர்களை நினைவுகூருவதற்கு எந்த நினைவுச்சின்னங்களும் இல்லாமல் இருக்கின்றன என்பதை இந்த ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது. இந்தமனிதப் புதைகுழிகள்தண்ணீர் குழாய்களை அமைப்பதற்காக அல்லது கட்டுமானங்களை அமைப்பதற்காக பணிக்கு அமர்த்தப்பட்டகட்டுமானத் தொழிலாளர்கள் பலரால் கண்டுபிடிக்கப்பட்டன,
இலங்கையின் கடப்பாடுகள்
இருப்பினும், இந்த தளங்கள் மற்றும் அவற்றின் கண்டுபிடிப்பு, விசாரணை மற்றும் நினைவுகூருதல் தொடர்பான சட்டங்கள் பற்றிய அறிவு குறைவாகவும் சிதறியதாகவும் உள்ளது. “மனிதப் புதைகுழிகளை கையாளும் ஒரு அரசு என்ற வகையில் இலங்கையின் கடப்பாடு குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும்” என சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் சர்வதேச தண்டனைச் சட்டம் பல ஆண்டுகளாக, காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உரிமைகள் மற்றும் எச்சங்களை மரியாதையுடன் நடத்துவது, என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை நிறுவுவது, யார் பொறுப்பு என்று விசாரிக்க வேண்டிய கடமைகள் ஆகியவற்றை நிர்ணயித்துள்ளது. செய்த குற்றங்களுக்காக அவர்களை நீதியின் முன் நிறுத்துதல், கல்லறை இடங்கள் மற்றும் அங்கு புதைக்கப்பட்டவர்களை நினைவுகூருவது மற்றும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும் இதில் அடங்கும்.
ஐ. நா.வால் உருவாக்கப்பட்ட மினசோட்டா விதி முறை என்பது நீதிவிசாரணைக்குப் புறம்பான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைத் தடுப்பதற்கும் விசாரணை செய்வதற்கும் ஒரு விரிவான கையேடாகும்.
அகழ்வுகளைஅரசாங்கங்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றிய பல விவரங்கள் இதில் உள்ளன. மினசோட்டா நெறிமுறை 1983 இல் பிலிப்பைன்ஸில் பெறப்பட்டது. அந்த நேரத்தில் இந்த சட்டவிரோத கொலைகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் அல்லது விதிமுறைகள் எதுவும் இல்லை.
அதன்பிறகு, பிரிட்டனில் உள்ள போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தில் உள்ள காணாமல் போனோர்களுக்கான சர்வதேச ஆணைக்குழு மேம்படுத்திய நெறிமுறை‘போர்ன்மவுத் புரோட்டோகால்’ என்று அறியப்படுகிறதுஎன்று ரத்னவேல் கூறினார் .
போதுமான சட்ட மற்றும் கொள்கைரீதியான கட்டமைப்புகள் இல்லை
இலங்கையின் தரநிலைகள், தோண்டுதல்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் தொடர்பான சட்ட மற்றும் கொள்கைரீதியான கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை என்று ரத்னவேல் கூறுகிறார்.
“போதாத தன்மைகள் பற்றி நாம் பேசும் போது, இலங்கையின் சட்டமானது தோண்டியெடுத்தல் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் தொடர்பான நடைமுறைகளை வழங்கவில்லை.
அண்மையில் மன்னார் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அரச அதிகாரிகள் சார்பில் ஆஜரான சட்டமா அதிபர், இந்த நடவடிக்கைகளை விசாரணை நடவடிக்கையாகவோ அல்லது சாதாரண நிகழ்வாகவோ கருதினார். இது போதாதது மற்றும் பொருத்தமற்றது என்று அவர் முதலில் சுட்டிக் காட்டியபோது சட்ட நடவடிக்கைகளில்குடும்பங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகமுடியாது என்று நீதிமன்ற உத்தரவு இருந்தது. ஆனால் பின்னர், குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் உரிமை தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது,” என்றார் ரத்னவேல்.
பயனற்ற முயற்சிகள்
2015 முதல் தற்போதைய சட்டங்களை திருத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அவை எதுவும் பலன் அளிக்கவில்லை. எவ்வாறாயினும்,மனிதப் புதைகுழிகள் தொடர்பாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டத்தில் சில பயனுள்ள விதிகளை சட்ட நிபுணர்கள் அவதானிக்கின்றனர். தோண்டி எடுக்கப்படுவதைக் கவனிப்பதற்கான ஏற்பாடும் இதில் அடங்கும்.

“ஆனால், அவதானித்தல், நீதிவானுக்கு ஆலோசனை வழங்குவது மற்றும் வெளிநாட்டில் மாதிரிகளை ஆய்வு செய்வதற்கு வசதியாக மற்றும் அனுமதிப்பதற்கு அவரது வரவு செலவுத் திட்டத்தைப் பயன்படுத்துவதில் அதிகாரிகளின் ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் குடும்பங்கள் காணாமற்போனோருக்கானஅலுவலகம் பற்றி மிகவும் சந்தேகம் கொண்டுள்ளனர்.
காணாமற் போனோர்அலுவலக சட்டத்தில் ஒரு பிரச்சனைக்குரிய பிரிவாக 32 உள்ளது, காணாமற்போனோர் அலுவலக விசாரணைகளின் கண்டுபிடிப்புகள் எந்தவொரு குற்றவியல் அல்லது சிவில் பொறுப்புக்கூறலுக்கும் வழிவகுக்காது என்று கூறுகிறது. தகவல் அறியும் உரிமையின் கீழ் மனித புதைகுழிகள் பற்றிய எங்கள் கோரிக்கைக்கு காணாமற்போனோருக்கான அலுவலகம் பதிலளித்த விதம், எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருப்பது, அது எவ்வளவு சிக்கலாக மாறியுள்ளது என்பதற்கான அறிகுறியாகும்,” என்றும் ரத்னவேல் மேலும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், மன்னார் மனித புதைகுழியை தோண்டி எடுக்கும் முக்கிய விடயத்தில் சாலிய பீரிஸ் தலைமையிலான காணாமற்போனோர்அலுவலகம் அன்றாட நடவடிக்கைகளுக்கு நிதியளித்து இயன்றளவு பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
“ஒரு சாதகமான குறிப்பில், ஒரு புதிய விசாரணைச் சட்டம் மற்றும் தோண்டி எடுப்பதற்கான நிலையான இயக்க நடைமுறைகளைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இருந்தன. இதுவரை எங்களிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. இந்தப் புதிய சட்டங்களை நாம் சரியாகப் பெறுவது முக்கியம், அது முழு வெளிப்படைத்தன்மையுடனும், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உட்பட ஒவ்வொரு பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து மட்டுமே செய்ய முடியும்
எந்தவொரு தடயவியல் நிபுணரும், சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பில் உள்ள சிக்கல்கள், வெவ்வேறு தடயவியல் அறிக்கைகளை ஒருங்கிணைத்தல், நெறிப்படுத்துதல் எளிதாக்குதல், இல்லாமை மற்றும் தடயவியல் குழு வெவ்வேறு தடயவியல்அறிக்கைகள் குறித்து உடன்படாததால் அவை மீண்டும் சமர்பிக்கப்படாமைபோன்றவையாகும். .
இது மாத்தளையில் நாம் பார்த்தது போல் நீதிவான் நடைமுறைப்
படுத்துவதற்கு போராடுவதற்கும், சில சமயங்களில் விசாரணைகளை தாமதப்படுத்துவதற்கும், விடயங்களை நிறுத்துவதற்கும் வழிவகுக்கும்போன்ற பல நடைமுறைச் சிக்கல்களை விளைவித்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வார்கள்என்று அவர் கூறினார்.
குடும்பங்களின் பங்கேற்பு
தோல்வியின் எட்டு பகுதிகளை அறிக்கை அடையாளம் காட்டுகிறது. முதல் மற்றும் மிக முக்கியமான ஒன்று, தற்போது அகழ்வு நடவடிக்கைகளில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் ஈடுபாடு இல்லாமையாகும். களுவாஞ்சிக்குடியில் வழக்கை ஆரம்பித்து இன்றுவரை நடத்தப்பட்ட 20 தோண்டுதல்களின் சுருக்கம் அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
“அரசாங்கம் இதுவரை மரணத்திற்கு முந்தைய தரவுகளை சேகரிக்கவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அத்தகைய முன்கூட்டிய பிரேதத் தரவு இல்லாமல், எச்சங்களை அடையாளம் கண்டு அவர்களின் குடும்பங்களுக்குத் திருப்பித் தருவது மிகவும் கடினம். அந்த இடத்தில் காணப்படும் ஆடைகள் அல்லது பொருட்களின் அடிப்படையில் எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட சில சந்தர்ப்பங்களில், எச்சங்கள் குடும்பங்களுக்குத் திருப்பித் தரப்படவில்லை, மேலும் தோண்டியெடுக்கும் போது வழக்கறிஞர்கள் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
காணாமற்போன உறவினர்களின் சடலங்கள் மீட்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த அண்மித்த பகுதியிலுள்ள குடும்பத்தினரின் நம்பிக்கை பொய்த்துள்ளது. அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பேசுவதற்கு எந்த ஆதரவும் இல்லை. தோண்டியெடுக்கும் செயல்முறையின் அனைத்து நிலைகளிலும் குடும்பங்களை ஆதரிப்பதற்கும் உளவியல்ரீதியாக சமூக ஆதரவில் உதவுவதற்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவது நல்ல நடைமுறையாகும்.
சட்டமாஅதிபர் அலுவலகத்தின் வகிபாகம்
சட்டமா அதிபர் அலுவலகம் ஆற்றிய எதிர்மறையான வகிபாகத்தை அவர் மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டினார். ஆரம்ப கட்ட விசாரணைகள் நம்பிக்கைக்குரியதாக காணப்பட்ட போதிலும், சட்டமா அதிபர் அலுவலக சட்டத்தரணிகள் இல்லாமை சில வழக்குகளுக்கு தடையாக காணப்பட்டது. சட்டமாஅதிபர் அலுவலகத்தின் எதிர்மறையான வகிபாகம் தொடர்பான எங்கள் பகுப்பாய்வில் வலுவான முடிவு உள்ளது.
“செம்மணி வழக்கில், ஒன்பது சந்தேக நபர்களில் நான்கு பேர் விடுவிக்கப்பட்டு, பின்னர்குற்றச்சாட்டிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர். வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு 2002 இல் பகிரங்கப்படுத்தப்பட்ட அதன் இறுதி அறிக்கையில் ஒரு சுயாதீனமான அரச வழக்குரைஞர் அதிகாரத்தை ஸ்தாபிக்குமாறு பரிந்துரைத்தது.
20 வருடங்களுக்குப் பின்னரும், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் பல நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன. ஐ.நா.வும் மீண்டும் மீண்டும் அதே பரிந்துரைகளை புறக்கணிக்க மட்டுமே செய்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
தோல்விக்கு வழிவகுக்கும் ஏனைய காரணிகள்
இதுவரை தோண்டியெடுப்பதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய மிக முக்கியமான காரணி அரசியல் தலையீடு ஆகும். மாத்தளை அகழ்வுகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எவ்வாறு நீதிவான் விசாரணையை புறக்கணித்து விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார் என்பது குறித்தும் ரத்னவேல் குறிப்பிட்டார்.
“அதன்பின், மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன,. உள்ளூர் தடயவியல் ஆராய்ச்சியாளர்கள் அவை 1980 களின் பிற்பகுதியில் இருந்தவர்கள்என்று முடிவுசெய்திருந்தாலும், உதாரணமாக கோத்தாபய ராஜபக்ச இராணுவ முகாமின் தளபதியாக மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த ஜே.வி.பி கிளர்ச்சி காலகட்டம்என்று முடிவு செய்திருந்தாலும்,அவை 1950 கள் காலப்பகுதியென வந்தன.
2014 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், குறித்த எச்சங்கள் விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அனுமானத்தில் ஆரம்பத்தில் துரிதப்படுத்தப்பட்டது. ஆனால், 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இணைந்த கருணா அம்மான் இந்த குறிப்பிட்ட புதைகுழி தொடர்பாக சம்பந்தப் பட்டிருப்பதை அரசு உணர்ந்து சில நாட்களுக்குப் பிறகு விசாரணைகள் ஸ்தம்பித்தன.
தோண்டியெடுக்கும் இடங்கள் எப்போதும் நன்கு பாதுகாக்கப்படுவதில்லை என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
“உதாரணமாக மன்னாரில் பொலிசார் தோண்டி எடுப்பதற்கு இன்னும் பல உடல்கள் இருந்தபோதிலும், அந்த இடம் சிதைந்துவிடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். விசாரணைகள் மற்றும் தோண்டுதல்களின் போது முக்கியமான இடங்களில் நீதிபதிகள் மற்றும் சில சமயங்களில் தடயவியல் நிபுணர்கள் மாற்றப்படும் பழக்கமும் உள்ளது. மன்னாரில், ஏழு நீதவான்களுக்கு குறையாமல் வழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வழக்குகளும் கொழும்புக்கு மாற்றப்பட்டு, விசாரணைக்கு வருவதற்கு குடும்பங்கள் மற்றும் சாட்சிகள் சிரமப்படுகின்றனர்.
இது செம்மணி வழக்கில் நடந்தது. இலங்கையில் தடயவியல் நிபுணத்துவத்திற்கு ஒதுக்கப்பட்ட வளங்களின் பற்றாக்குறையுடன் தொழில்நுட்ப அறிவின் பற்றாக்குறை மிகவும் நெருக்கமாக தொடர்புடையது என்பதை எந்தவொரு தடயவியல் நிபுணர்களும் ஒப்புக்கொள்வார்கள். டிஎன்ஏ விவரக்குறிப்பு, கணணி மயமாக்கப்பட்ட முக புனரமைப்பு மற்றும் அங்கீகாரம், வீடியோ மேலோட்டம் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக மனித அடையாள நிலையத்தை நிறுவ ஆணைக்குழு பரிந்துரைத்த போதிலும், அது அமைக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.
78 உறுதிமொழிப் பத்திரங்கள்
2011ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த பாரிய புதைகுழிகளில் உள்ளவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் எந்தவொரு தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தனது அனுபவங்களைச் சேர்த்த சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்தார். மாத்தளை மனித புதைகுழி தோண்டி எடுக்கப்பட்ட போது சுமார் 160 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
1988 க்கு இடையில் 1990 களின் ஆரம்பம் வரை மாத்தளையில் சுமார் 45 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. எலும்புக்கூடு எச்சங்கள் மீட்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு இந்த எச்சங்கள் அவர்களது உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு சொந்தமானவையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பேராசிரியர் ராஜ் சோமதேவ, அப்போதைய நீதித்துறை வைத்திய அதிகாரி அசோக ஜயசேனவிடம், 1987 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த எச்சங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறி அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தார். சில வாக்குமூலங்களில் அன்புக்குரியவர்கள் அல்லது உறவினர்கள் எங்கு காணாமல் போனார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வாக்குமூலத்தில் காணாமல் போனவர்கள் சில காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்பு நிலையங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றுமொரு வாக்குமூலத்தில் தம்புள்ளையைச் சேர்ந்த நபர் ஒருவர் மாத்தளையில் எவ்வாறு தடுத்து வைக்கப்பட்டார் என்பதும், இராணுவ முகாமில் அவரது மனைவி கையொப்பமிடப்பட்ட கடிதத்தை அவரிடமிருந்து எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் இவர்கள் அனைவரும் காணாமல் போயுள்ளனர்” என்றார்.
ஆனால் 2012 ஆம் ஆண்டு மீண்டும் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது பல சட்டத்தரணிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வழக்கை ஆதரிக்க தயக்கம் காட்டினர். “ஏனெனில் 2012 ஆம் ஆண்டளவில் யுத்தம் முடிவடைந்து சில இராணுவ அதிகாரிகள் தேசிய வீரர்களாக மாறியிருந்தனர். ஆனால் அவர்கள் 1988, 1989 காலப்பகுதியில் மாத்தளையில் நிலைகொண்டிருந்தனர் என்பதே உண்மை. அப்போதைய அரசியல் சூழல் காரணமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்கினார்கள்.
அவர்கள் இராணுவத்திற்கு எதிராக பேசுவதற்குப் பயந்தனர் மற்றும் அவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் இழப்பீடு கோர முடியாது என்று பயந்தனர். இந்தப் பின்னணியில்தான் 78 பிரமாணப் பத்திரங்கள் நீதவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தப்பட்டு குற்றவியல் நடைமுறைக் கோவை சட்டத்தின் 138ஆவது பிரிவின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்டன” என்று குமரப்பெரும கூறினார்.
எவ்வாறாயினும், இரண்டாவதுதடவை கருத்தைப் பெறும் நம்பிக்கையுடன் சிஐடி மாதிரிகளை சீனாவுக்கு அனுப்பியது. ஆனால் சீனாவிடம் இருந்து இலங்கை எந்த விதமான தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் பெறவில்லை. “நாங்கள் பிரிட்டன், அமெரிக்கா அல்லது இந்தியாவிற்கு மாதிரிகளை அனுப்பியுள்ளோம். மேலும் இந்த நீதித்துறை முறைமைகளிலும் ஒற்றுமைகள் உள்ளன.
ஆனால் அந்த மாதிரிகள் பின்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவால் வேறொரு நாட்டிற்கு அனுப்பப்பட்டன, மேலும் இந்த எச்சங்கள் 1950 களுக்கு முந்தையவை என்று தெரிவிக்கிறது. இதனால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
“இந்த வழக்குக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் இன்னும் அப்படியே உள்ளன. இந்த பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு என்ன நடந்தது என்று சிஐடி விசாரிக்கவில்லை. இந்த 78 நபர்கள் எங்கே என்று விசாரிக்க அரசு விசாரணையைத் தொடங்கவில்லை. இந்த சம்பவங்களைச் செய்தவர்கள் நிர்வாகத்தின் ஒரு பகுதியினர்.
நிர்வாகத்தினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீதிவான் விசாரணைக்கு உத்தரவிட்டாலும், விசாரணை அதிகாரம் நிர்வாகத்தின் ஒரு பகுதியாகும். எனவே விசாரணை ஆணைக்குழு சுதந்திரமானது அல்ல. இந்த மாதிரியான விசாரணையை நடத்தி குற்றவாளிகளை அடையாளம் காணும் விருப்பமும் தேவையும் அரசுக்கு இருக்க வேண்டும்.
தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கு மக்களுக்கு நீதி வழங்குவதில் விருப்பம் இல்லாமை தெரிகிறது. மனிதப் புதைகுழிகள் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் மருத்துவமனைகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ளன” என்று குமரப்பெரும கூறினார்.
முடிவில், இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கு விசேட நடைமுறைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என குமரப்பெரும கருத்து தெரிவித்துள்ளார். இல்லையெனில், இந்த குற்றவாளிகளை ஒருபோதும் சட்டத்தின் முன் நிறுத்த முடியாது,” என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.