கறுப்பு ஜூலை: 4 தசாப்தங்கள் கடந்த பிறகும் இலங்கைக்குள் தமிழர்களுக்கு தீர்வு என்பது கானல் நீரே!!

கறுப்பு ஜூலை: 4 தசாப்தங்கள் கடந்த பிறகும் இலங்கைக்குள் தமிழர்களுக்கு தீர்வு என்பது கானல் நீரே!!

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்கு பிறகு இந்த வாரத்துடன் நான்கு தசாப்தங்கள் உருண்டோடிவிட்டன.

ஒரு வாரத்துக்கு மேலாக தலைவிரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் கணிப்பிடமுடியாதவை.

தமிழர் என்ற தேசிய அடையாளத்தை முற்றிலும் துடைத்தழிக்க சிங்களப் பேரினவாத அரசு, நூற்றுக்கணக்கான தமிழர்களைக் கொன்று இனப்படுகொலை செய்தது.காலங்கள் கடந்தாலும் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகள் நம் இரத்தத்தை உறையவைப்பவை.

ஈழத் தமிழர்களின் வரலாற்றை வாசிப்பவர்கள் கண்ணீரின்றி கடக்க முடியாத நிகழ்வுகளுள் ஒன்று இந்த கறுப்பு ஜூலை கலவரம்.
1983-ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்களப் பேரினவாத அரசாலும், சிங்களவர்களாலும் தமிழர்களுக்கு நடத்தப்பட்ட கொடூரங்களே ‘கறுப்பு ஜூலை’ என்று குறிப்பிடக் காரணமாக இருக்கிறது.

ஒரு மனிதன் உணர்ச்சி மரத்துப் போய் நிர்வாணமான நிலையில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க, சுற்றிலும் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கும் புகைப்படத்தை காணாதவர்கள் இருக்க முடியாது.

அந்தக் கலவரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை, சிங்களவர்கள் இரக்கமின்றிக் கொன்று குவித்தார்கள். குடும்பத்துடன் தமிழர்களை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் ஈவிரக்கமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.தமிழர்களின் உடைமைகள், வர்த்தக நிலையங்கள், சொத்துகள் தொடர்பான விவரங்கள் ஏற்கனவே சிங்கள அதிகாரிகளால் கலவரக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

அதற்கமைய, வணிக வளாகங்கள், கடைகள், எரிபொருள் நிலையங்கள், திரையரங்குகள் என 5000-க்கும் மேற்பட்ட தமிழர்களின் வர்த்தக நிறுவனங்களை குறிவைத்து சூறையாடினார்கள்.

ஆறு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த தாக்குதலில் பெயரளவுக்கு போடப்பட்ட ஊரடங்கிற்கும், சிங்கள ஆயுதப் படை மறுப்பு தெரிவித்து, கலவரக்காரர்களுடன் இணைந்து கொண்டு தமிழர்களைத் தாக்கியது.

தலைநகரமெங்கும் தமிழர்களின் மரண ஓலங்களும், தீயடங்காது எரியும் தமிழர்களின் வணிக நிலையங்களும் என கொழும்பு கோரமாய்க் காட்சியளித்தது.1,50,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் உடைமைகள் இழந்து அகதிகளாக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜூலை 25 ஆம் திகதி கொழும்பின் வெலிக்கடைச் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளான ரெலோ அமைப்பை சார்ந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், காந்திய அமைப்பைச் சார்ந்த வைத்தியர் ராசுசுந்தரம் மற்றும் எஸ்.ஏ டேவிட் உட்பட 37 பேர் சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அவர்கள் அளித்த ஆயுதங்களோடு மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

“அரசு என்னை ஒரு நாள் கொன்று விடும். எனது கண்களை ஈழத் தமிழர்களுக்கு பொருத்தி விடுங்கள். நான் காண இயலாத தமிழ் ஈழத்தை எனது கண்களாவது காணட்டும்” என்று குட்டிமணி நீதிமன்றத்தில் கூறியதாகவும் இந்த கண்கள் இருந்தால் தானே ஈழத்தை பார்க்கும் என்று குட்டிமணியின் கண்களைத் தோண்டியெடுத்து, அதனை காலால் மிதித்தார்கள் என கூறப்படுகின்றது

அந்த நாளோடு மட்டும் அந்தக் கொடூரம் முடியவில்லை.மீண்டும் ஜூலை 28 ஆம் திகதி அந்த சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. 18 தமிழர்கள் கொல்லப்பட்டனர். மூன்றே நாட்களில் 55 தமிழ் கைதிகள் இனவெறிக்கு இரையாக்கப்பட்டார்கள்.

இலங்கையில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவங்களையும், படுகொலைகளையும் சர்வதேசப் பத்திரிக்கைகள் கண்டித்து செய்தி வெளியிட்டன.அதற்கமைய, இங்கிலாந்தின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையானது,
‘ஏனைய ஆசிய நாடுகளின் கலவரங்களிலிருந்து இந்தக் கலவரத்தின் தெளிவான வேறுபாடு, தமிழர்களின் வர்த்தகத் தலங்களைத் தேடி கலவரக் கும்பல்கள் கண்டுபிடித்து தாக்கியதே ஆகும்.காவலர்களும், அரசப் படைகளும் கலகக்காரர்களுடன் சேர்ந்தே தாக்கினார்கள்’ என எழுதியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் ,
‘சேர்ந்து வாழ்வது கடினமானதென்றால் வடக்கில் தமிழர்களுக்கு தனி நாடு கோரும் உரிமை இருக்கவே செய்கிறது’ என எழுதியிருந்தது.மேலும் ஜூலை கலவரத்தை தமிழ் நாட்டின் பத்திரிக்கைகளும், இந்திய ஒன்றியத்தின் முக்கியப் பத்திரிக்கைகளும் இதனை தலைப்புச் செய்திகளாக்கின.

தமிழ் நாட்டிலும், உலகத் தமிழர்களிடையிலும் இந்த ஜூலை கலவரம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.கட்சி, அமைப்பு வேறுபாடுகளின்றி தமிழகத்தின் பொதுமக்கள் இலங்கை அரசுக்கெதிரான பேரணி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என தங்கள் தமிழீழ உறவுகள் கொன்றொழிக்கப்பட்டதை கண்டித்து ஒன்று திரண்டார்கள்.சர்வதேச சமூகமும் கண்டனத்தை தெரிவித்தன.

இந்த ஜூலை கலவரம், பல்லாயிரம் தமிழ் இளைஞர்களை ஆயுதம் தரித்த விடுதலைப் போரில் சேர அடித்தளமானது.தமிழ் நாட்டு தமிழர்கள் இந்தியப் படையை அனுப்பி அமைதியை நிலைநாட்ட கோரிக்கை எழுப்பியதும் ஜூலை கலவரத்தால் உருவானது.

கறுப்பு ஜூலை என்பது ஜூலை மாதத்தில் ஆரம்பித்த நிகழ்வு அல்ல. அது மே மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக நடந்து வருவது.1983 மே மாதத்தில் அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்கக் கூடாது என்று தமிழீழ விடுதலைப்புலிகள் கொடுத்த அழைப்பின் பேரில் தமிழர் பகுதியில் 98 சதவீதம் பேர் தேர்தலை முற்றுமுழுதாக புறக்கணித்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் தமிழர் பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஜே.ஆர். ஜயவர்தனவை கோபம் அடைய செய்தது.
இதனால் ஜே.ஆர். ஜயவர்தன தனது படைகளை கட்டவிழ்த்துவிட, தமிழர் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்.

வீடுகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்த பதட்டம் வவுனியா முழுவதும் பரவியது.பின்பு திருகோணமலைப் பகுதிகளிலும் பரவியது.1983 ஜூலை மாதம் நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாகிப் போனது.

1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் விடுதலை புலிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச்சக்திகள் நாடு பூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கெனவே திட்டமிட்டுவந்த வன்செயல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான படையினர் கொல்லப்பட்டது இத்தாக்குதலில் ஆகும்.
கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு ஒரு வாரம் முன்னதாக லண்டன் ரெலிகிராவ் பத்திரிகைக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அளித்த பேட்டியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய மனநிலையில் இருந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.

‘‘இப்போது நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களைப் பற்றி அல்லது அவர்களது உயிர்களைப் பற்றி அல்லது எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி இப்போது எங்களால் சிந்திக்கமுடியாது.
வடக்கு மீது எந்தளவுக்கு நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்றோமோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று அவர் சொன்னார்.

ஜயவர்தனாவின் அந்த கருத்துக்கள் கறுப்பு ஜூலை வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினால் சிங்களவர்கள் ஆவேசமடைந்ததால் மாத்திரம் மூண்டதல்ல, இனவாதச்சக்திகள் நீண்ட நாட்களாக தீட்டிவந்த திட்டத்தின் விளைவானது என்பதை அம்பலப்படுத்தியது.

அதற்கமைய, உயிரிழந்த இராணுவத்தினரின் உடல்களை யாழ்ப்பாணத்திலேயே அடக்கம் செய்ய இராணுவத்தினர் விரும்பிய போதும், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்களது உடலை கொழும்பில் சிங்கள மக்கள் மத்தியில் பார்வைக்கு வைத்து அடக்கம் செய்ய முடிவெடுத்தார்.

ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அரசாங்கம், இராணுவத்தினரின் மரணத்தை இனவெறி தூண்டும் நிகழ்வாக மாற்றியது.எந்த இராணுவ வீரர்கள் மறைவிற்கும் கடைபிடிக்காத புதிய முறைகளில் இந்த இராணுவத்தினருக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

இராணுவ வீரர்களின் சடலங்கள் சவப்பெட்டியில் எடுத்து வரப்படாமல் இன கலவரத்தை தூண்டும் நோக்குடன் பொலித்தீன் பைகளில் கட்டிக் கொண்டுவரப்பட்டன.வீரர்களின் இறுதி ஊர்வலத்தை தாமதப்படுத்தினார்கள்.இந்த தாமதம் பெரும்பாலான சிங்களவர்களை கொழும்பை நோக்கி வரச் செய்வதற்கு போதுமான காலமாக இருந்தது.

குறித்த கலவரம் ஜூலை 23-க்கு பின்னர் உச்சத்தை அடைந்தது.
இதன் பின்பு தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்த பொது கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.அப்போது கொழும்பிலிருந்து வந்த யாழ். தேவி ரயில் தமிழ் இளைஞர்களால் தீயிடப்பட்டது.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தினால், யாழ்ப்பாணப் பத்திரிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து படிப்படியாகதென்னிலங்கைக்கும் வன்முறை பரவியது.இதனால் 1,50,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் உடைமைகள் இழந்து அகதிகளாக்கப்பட்டனர்.
மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்.

அரச பயங்கரவாதப் படைகளால் திட்டமிடப்பட்டு நிகழ்த்திய படுகொலை என்பதை ‘கறுப்பு ஜூலை’ வெளிச்சமிட்டு காட்டியது.வன்செயல்கள் மூண்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பிறகு ஜூலை 28 வியாழக்கிழமை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெயவர்தனஅந்த வன்செயல்களை தமிழ் அரசியல்வாதிகளின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான பிரதிபலிப்பு என்று கூறி நியாயப்படுத்தினாரே தவிர, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

வன்செயல்களை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, படையினரும் பொலிஸாரும் வன்முறைக்கும்பல்களுக்கு அனுசரணையாகவே செயற்பட்டனர்.அரசாங்க அரசியல்வாதிகள் பல அமைச்சர்களும் கூட தங்கள் பகுதிகளில் முன்னணியில் நின்று தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டிவிட்டார்கள்.

வன்முறைக் கும்பல்களைக் கலைக்க படையினர் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்று ஜயவர்தனவிடம் பி.பி.சி. பேட்டியொன்றில் கேட்கப்பட்டபோது,
“படையினர் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகள் பெருமளவுக்கு இருந்தது என்று நான் நினைக்கிறேன்.கலவரங்களில் ஈடுபட்ட சிங்களவரைச் சுடுவது சிங்கள சமூகத்துக்கு விரோதமான செயலாக இருக்கும் என்று படையினர் உணர்ந்திருக்கக்கூடும்.சில இடங்களில் கலகக்காரர்களை படையினர் உற்சாகப் படுத்தியதையும் கண்டோம்” என்று பதிலளித்தார்.

1952 இல் பண்டாரநாயகா இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், சிங்களத்தை அரச மொழியாக்கி, தமிழ் மொழி கீழிறக்கப்பட்டது.
தமிழர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ‘சிங்களம் மொழி தெரிந்தாக வேண்டும், இல்லையென்றால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு இல்லை’ என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்பொழுது தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சமஷ்டிக் கட்சியான தந்தை செல்வா தலைமையில் இயங்கிய தமிழரசு கட்சி அமைதிவழிப் போராட்டமே நடத்தியது.அதற்கு பலன் அம்பாறை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை மற்றும் வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன.

கொழும்பிலிருந்து 10,000க்கும் மேற்பட்டோர் அகதிகளாகி வடக்கு, கிழக்கு பகுதிக்கு சென்றார்கள்.அப்பொழுதும் தன்னாட்சி கோரிக்கையை வெகு ஜன மக்களிடம் எடுத்துச் செல்ல சமஷ்டிக் கட்சி அறவழியிலேயே போராடியது.

1961 ஆம் ஆண்டிலும் அதே அறவழிப் போராட்டம் தான் நடத்தியது.
அதே ஆண்டு மூன்று மாத காலம் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் வடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள அரசு நிறுவனங்கள் முடங்கின.சிங்களச் சட்டத்திற்கு புறம்பாக தமிழ் தேசிய அஞ்சல் தலைகள் சமஷ்டிக் கட்சியால் வெளியிட்டது.

இப்படியே அறவழிப் போராட்டங்களும் தமிழர் படுகொலைகளும் தொடர்ந்த வண்ணமிருக்க, தமிழர்களுக்கான அறவழிக் கட்சிகள் தமிழர்களின் அரசியல் சுதந்திரத்தை, தமிழ் தேசிய அடையாளத்தை காப்பாற்ற இணையத் துவங்கின.அவர்களும் இலட்சியத்தின் பாதைகளை விட்டு பாராளுமன்றப் பதவிக்குள் முடங்கி விட்டனர்.

இதற்கிடையில் இலங்கை அரசின் 1967, 1971, 1979-ம் ஆண்டுகளில் கொண்டு வந்த தரப்படுத்துதல் சட்டங்கள் தமிழர்களின் கல்வியில் பேரிடியாய் நுழைந்தது.

அதாவது, அதிக புள்ளிகள் பெற்ற, திறமை வாய்ந்த தமிழ் மாணவர்கள் வாய்ப்புக்களை இழக்க, குறைந்த புள்ளிகள் பெற்ற சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்புக்களைப் பெற்றனர்.

வேலை வாய்ப்பின்றி, உயர் படிப்புக்கு வழியுமின்றி விரக்தியும், சலிப்பும் புறச் சூழலாக இளைஞர்களை புரட்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கத் தூண்டியது.‘கறுப்பு ஜூலை’ நிகழ்வு காலங்கள் கடந்தாலும் தமிழர்களின் மனதில் ஆறாத காயங்களையும், தீராத வலிகளையும் தமிழர்கள் மனதில் கிளறிக் கொண்டேயிருக்கும்.

சிங்களப் பேரினவாத அரசு ஆயிரக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலையும், இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த 2009 ஆம் ஆண்டின் மே மாதமும் யாராலும் மறக்கமுடியாது.

நான்கு தசாப்தங்களிலும் 15 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மேற்கு ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் புலம்பெயர்ந்து நவீன வாழ்க்கை வாழ்கிறார்கள்.

மேற்கு நாடுகளில் உள்ள செல்வாக்குமிக்க ஆசிய புலம்பெயர் சமூகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினராக இலங்கைத் தமிழர்கள் விளங்குகிறார்கள்.இலங்கையில் வந்து முதலீடுகளைச் செய்து தாய்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமாறு அரசாங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுக்கின்ற அளவுக்கு புலம்பெயர்இலங்கை தமிழர்களில் பலர் பொருளாதார ரீதியில் வலிமை மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காணும் முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின், குறிப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை இடையறாது ஈர்க்கும் அரசியல் செயற்பாடுகளிலும் அவர்கள் மத்தியில் உள்ள அமைப்புக்கள் ஈடுபட்டுவருகின்றன.

வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களில் இருந்து இன்னமும் முழுமையாக விடுபடமுடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன.

போரின் முடிவுக்குப் பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன.
தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாத சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

தொல்பொருள் ஆராய்ச்சி, வனப்பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது.

கறுப்பு ஜூலைக்கு பிறகு இந்தியாவின் நேரடித் தலையீட்டை அடுத்து 1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை மாகாணசபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது.அதற்காக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் 36 வருடங்கள் கடந்தும் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சகல அரசாங்கங்களுமே உறுதிசெய்துகொண்டன. இந்தியாவினால் கூட அது விடயத்தில் இலங்கையை வழிக்கு கொண்டுவர முடியவில்லை.

சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் தீர்வை நோக்கிய பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தின் 1991 மங்களமுனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு,சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில் பாராளுமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட்ட 2000 புதிய அரசியலமைப்புக்கானயோசனைகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 2006 பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் மற்றும் மைத்திரிபால – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில்புதிய அரசியலமைப்பை வரைவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயன்முறை ஆகியவையே அவையாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பல சந்தர்ப்பங்களிலும் இந்த முயற்சிகளைப் பற்றிதிரும்பத்திரும்ப விளக்கிக் கூறிவந்தார்.

இறுதியாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திவந்த பேச்சு வார்த்தைகளிலும் கூட சம்பந்தன் அவற்றைப் பற்றி பேசினார்.
அண்மைக்காலமாக தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திவந்த பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றத்தைக் காணமுடியாமல் இருக்கிறது.

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாகக் கூறிக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க கடந்த டிசம்பரிலும் ஜனவரியிலும் இரு தடவைகள் சர்வகட்சி மாநாடு என்ற பெயரில் பாராளுமன்ற கட்சிகளின் மாநாட்டை கூட்டினார்.

அந்த முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல்போன நிலையில் இறுதியாக தமிழ்க்கட்சிகளுடன் மாத்திரம் அவர் பேசினார்.13 வது திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனது அரசாங்கம்நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

அரசியலமைப்பில் இருக்கும் அந்த திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதி என்ற வகையில்தனது கடமை என்று அதை எதிர்க்கும் அரசியல் சக்திகளுக்கு கூறிய அவர் ஒன்றில் அந்த திருத்தத்தைமுழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் அல்லது அதை ஒழித்துவிட எவராவது பாராளுமன்றத்தில் புதியதிருத்தச்சட்டம் ஒன்றை தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், தென்னிலங்கையில் கிளம்பிய எதிர்ப்பையடுத்து பதின்மூன்றைப் பற்றி பேசுவதை அவர் தவிர்த்துக்கொண்டார்.இப்போது இறுதியாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக கடந்தவாரம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அவர் யோசனையை முன்வைத்தார்.

ஆனால், தமிழ்க்கட்சிகள் அதை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டன.
இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னதாக அந்த யோசனையை ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டதற்கு ஒரு அந்தரங்க நோக்கம் இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

புதுடில்லியில் இந்திய அரசாங்கத்திடமிருந்து 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தல் வரும்போது தன்னால் அது விடயத்தில் செய்யக்கூடியது என்ன என்பதை அவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தும் நோக்குடன்தான் பொலிஸ் இல்லாத 13 பற்றி ஜனாதிபதி கொழும்பில் பேசினார்.

தமிழ்க்கட்சிகள் அதை நிராகரித்துவிட்ட நிலையில் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை மீண்டும் எவ்வாறு தொடங்குவது என்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.ஜனாதிபதி தேர்தல் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர்களை வென்றெடுப்பதை விடவும் தென்னிலங்கை தேசியவாத சக்திகளை பகைத்துக்கொள்ளாமல் இருப்பதிலேயே கூடுதல் அக்கறை காட்டக்கூடும்.

பெளத்த அடிப்படைவாத, சிங்களப் பேரினவாத மனப்போக்கு கொண்டவர்கள் ஆளும் வரை இலங்கைக்குள் தமிழர்களுக்கு தீர்வு என்பது கானல் நீரே.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )