
பிரித்தானிய உள்விவகார அமைச்சர் சுயெல்லா பிரேவர்மனை பதவிநீக்கம் செய்த பிரதமர் ரிஷி சுனக்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) அந்த நாட்டு உள்விவகார அமைச்சர் சுயெல்லா பிரேவர்மனை (Suella Braverman) பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலஸ்தீன ஆதரவு பேரணிகளை பொலிஸார் கையாள்வது குறித்து சுயெல்லா பிரேவர்மன் கடந்த வாரம் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மன் பிரித்தானிய அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவராக கருதப்படுகின்றார்.
இவர் பல்வேறு சந்தர்ப்பங்களின் போது சர்ச்சையில் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுத குழு இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மோதல் நடவடிக்கையானது 38 ஆவது நாளாக தொடர்கின்றது.
இந்த மோதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறே பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, பிரித்தானியாவில் கடந்த சனிக்கிழமை (11) 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்களினால் பேரணி நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், 140 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 7 பேர் மீதும் கைது செய்யப்படுவதை தடுத்தல், ஆயுதம் வைத்திருத்தல், போதைப்பொருள் வைத்திருத்தல், மதுபோதை மற்றும் ஒழுங்கற்ற நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சமூக ஊடகங்களில் படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படும்போது தமது கவனத்திற்கு வருபவர்கள் மற்றும் காவலில் உள்ளவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடரும் அதிகாரிகளின் குழுக்கள் தம்மிடம் உள்ளதாக கைது நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய துணை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலே, பாலஸ்தீன போராட்டம் குறித்து பிரித்தானிய உள்விவகார அமைச்சர் சுயெல்லா பிரேவர்மன் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுயெல்லா பிரேவர்மன் வெளியிட்ட கருத்து என்ன?
பாலஸ்தீன சார்பு ஆதரவாளர்களுக்கு ஆதரவான பொலிஸார் வலதுசாரி மற்றும் தேசியவாத எதிர்ப்பாளர்களை போல பாலஸ்தீனிய சார்பு குழுக்களை நடத்த தவறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், பாலஸ்தீன சார்பு போராட்டங்களை வெறுக்கத்தக்க பேரணிகள் என வாக்கப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மேலும், முதலாம் உலகப் போரின் முடிவைக் குறிக்கும் போர்நிறுத்த நிகழ்வுகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சனிக்கிழமை நிகழ்வைத் தடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் எதிர்ப்பாளர்களின் விஷயத்தில் சார்பாக நடந்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பேரணியானது காசாவுக்கான உதவிக்கான குரல் என தம்மால் நம்பமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுயெல்லா பிரேவர்மனின் கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பினர் கண்டனம்
சுயெல்லா பிரேவர்மனின் கருத்துக்கள் யாவும் ரிஷி சுனக்கின் சுய விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுயெல்லா பிரேவர்மனின் கருத்துக்கள் அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, பிளவுகளை ஏற்படுத்தும் மற்றும் எரிச்சலூட்டும் கருத்துக்களை சுயெல்லா பிரேவர்மன் பகிர்ந்துள்ளதாக பல அரசியல் தரப்பினர் விமர்சித்துள்ளனர்.
அத்துடன், பிரித்தானிய சட்ட அமுலாக்கத்தை மேற்பார்வையிடும் பிரேவர்மன் பதவி விலக வேண்டும் என ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் ஹம்சா யூசுப் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு தரப்பில் இருந்து சுயெல்லா பிரேவர்மனுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
முன்னதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சுயெல்லா பிரேவர்மனை பதவி நீக்கம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த போதும், எதிர்ப்பு வலுப்பெற்ற நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

