
ஜனாதிபதி ரணிலுடன் செல்வதா? கட்சிதான் தீர்மானிக்க வேண்டும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் செல்வதா இல்லையா என்பதனை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும்.கட்சி எடுக்கும் முடிவோடு நாங்கள் உடன்படுவோம் என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நத்தார் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
அரசியலில் தேர்தலுக்கு பயப்பட முடியாது. அரசாங்கங்கள் வருவதும் போவதும் எங்களுக்குத் தெரியும். கடந்த காலங்களில் ஜே.வி.பி உடன் தொடர்புடையவர்களால் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அவர்கள் தனிப்பட்ட அமைப்பினருடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். கிராமத்தில் உள்ள மொட்டு எம்.பி.க்கள் கிராமத்திற்கு வராத வகையில் அவர்களின் வீடுகளுக்கு மட்டும் தீ வைக்கப்பட்டது. புதிதாக பாராளுமன்றத்திற்கு வந்த மொட்டு உறுப்பினர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
இது திட்டமிடப்பட்ட ஒன்று . நாங்கள் கிராமங்களை விட்டு வெளியேறுவோம் என்று எதிர்பார்த்தார்கள். எங்கள் எம்.பி.க்கள் மீண்டும் கிராமங்களுக்கு சென்று அரசியல் செய்கிறார்கள். எந்த சவாலையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனா எதிர்காலத்தில் போவீர்கள் எனக்கேட்கின்றீர்கள் .இது ஒரு கட்சி எடுக்கும் முடிவு.
கட்சி எடுக்கும் முடிவோடு நாங்கள் உடன்படுவோம்.
பொது வேட்பாளராக போட்டியிடும் நபரை ஆதரிப்பீர்களா என்ற உங்கள் கேள்விக்கு பதிலளிப்பதானால் இந்த சவாலை நாம் எதிர்கொள்ள முடியும். வெற்றி பெறலாம். விட்டுக் கொடுக்காத, உழைக்கும் தலைவருக்கு நாங்கள் உதவுவோம் என்றார்.

