கொக்குத்தொடுவாயில் ‘மனித புதைகுழி’ பகுதியில் சிசிடிவி கமராக்கள் பொருத்தம்

கொக்குத்தொடுவாயில் ‘மனித புதைகுழி’ பகுதியில் சிசிடிவி கமராக்கள் பொருத்தம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, “குறித்த இடத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட செயலகத்திடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இவ்வாறு சிசிடிவி கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வாராய்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடங்கும்.“ என்று வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாயில் மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் திகதிவரை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதுவரை கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்ய ஒரு இடைவெளி தேவை என்று தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா கூறியிருந்தார்.

கொக்குத்தொடுவாயில் மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் ஒன்பது நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், பதினேழு எலும்புக் கூடுகள் இங்கு தோண்டி எடுப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் தீர்ப்புகளை வழங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி டி.சரவணராஜா, தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன், நீதிசேவை ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றையும் அவர் வழங்கியுள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, நீதிபதி டி.சரவணராஜாவுக்கு சட்டமா அதிபராலோ அல்லது அரசாங்கத்தாலோ எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படவில்லை.

அவருக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இருப்பதாக அவரது நெருங்கிய நண்பர்களுக்குகூட தெரிவித்திருக்கவில்லை. அவரது குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதுடன், நீதிசேவை ஆணைக்குழு இதுகுறித்து விசாரணைகளை நடத்தி வருகிறது.” எனக் கூறியிருந்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )