
2015 ஆம் ஆண்டில் யாழ். சென்ற மோடி நல்லூர் செல்லாதது ஏன்?
இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்ட போது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தாதது ஏன் என்பது தொடர்பாக இலங்கைக்காக இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் நடராஜன், இதுவரை வெளியாகாத தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய துணை தூதராக 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் ஏ.நடராஜன். From the Village to the Global Stage என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றை ஏ.நடராஜன் எழுதி உள்ளார். இந்தப் புத்தகம் விரைவில் கோவையில் வெளியிடப்படவுள்ளது. இந்தப் புத்தகத்தில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அந்தப் புத்தகத்தில் ஏ.நடராஜன் எழுதியிருப்பதாவது:
பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம் பயணத்தின் போது நல்லூர் கோவில் அல்லது மாவிட்டாபுரம் கந்தசாமி கோவில் அல்லது கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலுக்கு அழைத்துசெல்ல திட்டமிடப்பட்டது.
இது தொடர்பாக நல்லூர் கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி குமாரதாச மாப்பாண முதலியாருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது. அப்போது, கோவிலுக்குள் மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும் குறிப்பிட்ட நேரத்தில்தான் கோவில் நடை திறக்கப்படும் என்ற மரபுகளில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என நல்லூர் தேவஸ்தான அதிகாரி திட்டவட்டமாக கூறிவிட்டார் . இதனால் நல்லூர் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடியால் செல்ல முடியவில்லை.
ஆனால் கீரிமலை நகுலேஸ்வரர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அப்போது 98 வயதான நகுலேஸ்வரக் குருக்கள் உடனிருந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார். இவ்வாறு ஏ.நடராஜன் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13,14-ஆம் திகதிகளில் பயணம் மேற்கொண்டார். அரசு முறை பயணமாக 27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி. 1987ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை சென்றார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. அந்த பயணத்தின் போது இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவரால் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. 2008-ல் சார்க் மாநாட்டில் பங்கேற்க அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் சென்றிருந்தார். ஆனால் அது இலங்கைக்கான தனிப்பட்ட அரசு முறை பயணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.