
மட்டு மேய்ச்சல் தரையில் மாடுகள் சுட்டுக் கொலை
மட்டக்களப்பு மேய்ச்சல் தரை பகுதியான மயிலத்தமடு மாதவனை பகுதியில் கால்நடை பண்ணையாளர்கள் இருவரின் தலா ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரு மாடுகள் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதுடன் கடந்த ஒரு மாதத்தில் பல மாடுகளை அங்குள்ள சட்டவிரோத சிங்கள குடியேற்றவாசிகள் சுட்டு கொன்று அழித்துவருவதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள பொலனறுவை எல்லைப் பகுதியிலுள்ள இந்த மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடைவளர்ப்பாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியாகும்.
இந்த நிலையில் இந்த மேச்சல்தரை பகுதியை யுத்தம் முடிவடைந்த பின்னர் 2015 ம் ஆண்டு அம்பாறை பொலனறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் சட்டவிரோதமாக அத்துமீறி நிலங்களை அபகரித்து கொட்டகையமைத்து பயிர் செய்கை செய்துவந்த நிலையில் அந்த பயிர் செய்கைகளுக்குள் கால்நடைகள் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டதாக பல மாடுகளை பிடித்து கட்டி வைத்ததுடன் சில மாடுகளை கத்தியால் வெட்டியும் சில மாடுகளை கொன்றும் வந்துள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அவர்கள் அங்கிருந்து வெளியேறமால் சட்டவிரோதமாக தங்கியிருந்து கொண்டு மேய்ச்சல் தரையில் மேயும் மாடுகளை ஒவ்வொன்றாக சுட்டுக் கொன்று வந்துள்ளனர்.
இது தொடர்பாக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் செய்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்தில் பல மாடுகள் சட்டு கொல்லப்பட்டுள்ளதுடன் நேற்று முன்தினம் இரவு இரு மாட்டை சுட்டுக் கொன்றுள்ளனர்
இந்தப் பகுதியில் மகாவலி திட்ட பாதுகாப்பு படையினரின் கீழ் உள்ளதுடன் அங்கு சட்டவிரோத குடியேற்றவாசிகளும் இருந்துவரும் நிலையில் தொடர்ந்து கால்நடைகள் சுட்டுக் கொல்லப்படுவதுடன் மேய்ச்சல் தரையில் சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அகற்றமாறு கோரி கால்நடை வளர்ப்பாளர்கள் மட்டு சிந்தாண்டியில் நேற்று புதன்கிழமை 35 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் ஜனாதிபதி சட்டவிரோத சிங்கள குடியேற்ற வாசிகளை அகற்றுமாறு உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த கால்நடை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன.
இவ்வாறு தொடர்ச்சியாக கால்நடை பண்ணையாளர்களின் மாடுகளை சட்டவிரோத சிங்கள குடியேற்ற வாசிகள் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் கொன்று வருகின்றனர். எனவே தமது வாழ்வாதாரமான கால்நடையான மாடுகளை தினம் கொன்று குவித்து அழித்துவருவதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.