மயிலத்த மடுவில் விவசாயம் செய்யும் வெளி மாவட்டத்தவரை உடன் வெளியேற்றுங்கள்; அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவசர பணிப்பு

மயிலத்த மடுவில் விவசாயம் செய்யும் வெளி மாவட்டத்தவரை உடன் வெளியேற்றுங்கள்; அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவசர பணிப்பு

வெளிமாவட்டங்களிலிருந்து வந்து மட்டக்களப்பு மயிலத்த மடுவில் விவசாயம் மேற்கொள்பவர்களை உடனடியாக வெளியேற்றுமாறும், இதற்கு இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறும், அப்பகுதியில் குடியமர்ந்துள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு காணி இல்லை எனில் அவர்களுக்குரிய மாவட்டங்களிலேயே காணிகளைப் பெற்றுக் கொடுக்குமாறும், அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மயிலத்த மடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர்,ஆளுங்கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர்,மகாவலி இயக்குநர் நாயகம் , பொலிஸ்மா அதிபர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு என்பன இந்த நாட்டின் முதுகெலும்பாகும். இவை இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே வெளிமாவட்டங்களிலிருந்து வந்து மட்டக்களப்பு மயிலத்த மடுவில் விவசாயம் மேற்கொள்பவர்களை உடனடியாக வெளியேற்றுமறும், இதற்கு இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் ஒத்தழைப்பை பெற்றுக் கொள்ளுமாறும், அப்பகுதியில் குடியமர்ந்துள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு காணி இல்லை எனில் அவர்களுக்குரிய மாவட்டங்களிலேயே காணியைப் பெற்றுக் கொடுக்குமாறும், அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இவ்வாறு மாற்று இடங்கள் வழங்குவதன் ஊடாக பண்ணையாளர்கள், விவசாயிகள் என இருத்தரப்பினருடைய பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி அந்தப் பகுதியில் புற்றரைகள் பாதிக்கப்பட்டிருந்தால், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அதற்கு உதவி செய்ய வேண்டுமெனவும் பணித்தார்.

மேலும் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரை கால்நடைகளுக்கு உணவுகளை வழங்க தேவையான உதவி தொகைகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )