
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கச் சட்டம் ?
ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான சட்டம் கொண்டு வரப்படுமாக இருந்தால் அதன்போது என்ன செய்வதென்று ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டால் உங்கள் கட்சி எவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் என்று ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சாகர காரியவசம் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அதன்போது மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசியலமைப்புக்கமைய தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கென குறிப்பிட்ட காலம் உள்ளது. இதன்படி அவ்வாறான ஜனாதிபதியொருவர் பதவி விலகினால் அவரின் எஞ்சிய காலத்திற்காக இன்னுமொருவர் தெரிவு செய்யப்படுவார். அதேபோன்றே பாராளுமன்றத்திற்கும் கால எல்லை உள்ளது. அதன் பின்னர் அதற்கு அதிகாரம் இருக்காது.
கட்சியென்ற ரீதியில் நாங்கள் மக்களின் வாக்குரிமைக்காக முன்னிருப்பவர்கள். மகிந்த ராஜபக்ஷ தேர்தலை எப்போதும் ஒத்தி வைத்ததில்லை. யாரை தெரிவு செய்வது என்பதனை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கே உள்ளது. இதன்படி கட்சியென்ற ரீதியில் சரியான காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு முன்னிருப்போம்.
இதேவேளை கட்டாயம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். இல்லாவிட்டால், நாட்டின் தற்போதைய சட்டத்திற்கமைய நாட்டை அராஜகத்திற்குள் கொண்டு செல்லும் நிலைமையாக அமையும்.
அவ்வாறு சட்டத்தை கொண்டு வந்தால் அதன்போது என்ன செய்வதென்று பார்ப்போம். ஆனால் தற்போது அது தொடர்பில் எந்த கலந்துரையாடலோ, யோசனைகளோ முன்வைக்கப்படவில்லை. இல்லாத ஒருவிடயம் தொடர்பில் கதைக்க முடியாது. அவ்வாறான நிலைமை வந்தால் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முன்னிற்போம் என்றார்.