ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயம்; கோப்பைகளை ஏந்தி காலநடை பண்ணையாளர்களும் போராட்டம்!

ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயம்; கோப்பைகளை ஏந்தி காலநடை பண்ணையாளர்களும் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைதந்த நிலையில் சித்தாண்டியில் பண்ணையாளர்கள் கைகளில் கோப்பைகளை ஏந்தியவாறு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை காணிகள் பெரும்பான்மை சிங்களவர்களினால் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கடந்த 23நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவரும் நிலையில், நேற்றும் (07.10.2023) போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று வருகை தந்தமையினையொட்டி கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கைகளில் கோப்பைகளை ஏந்தி தமது நிலங்ளை தங்களுக்கு வழங்குமாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை சந்திவெளி பொலிஸார் மற்றும் ஏறாவூர் பிரதேச பிரதி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக போராட்டத்திற்கு எதிரான தடையுத்தரவு வழங்க முற்படுகையில், பொலிஸாருக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் நீதிமன்ற கட்டளையினை இதுவரையில் நடைமுறைப்படுத்தாத பொலிஸார் அமைதியான முறையில் போராடிவரும் தமக்கு தடையுத்தரவு வழங்குவதா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதனை தொடர்ந்து கால்நடைபண்ணையாளர்களின் போராட்டம் தொடர்பான நீதிமன்ற கட்டளை வாசிக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த சுவரில் பொலிஸாரினால் நீதிமன்ற கட்டளை ஒட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அமைதியான முறையில் பண்ணையாளர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )