
துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் தொடர்கிறது
அவிசாவளை,தல்துவ,குருபஸ்கொட பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளையிலிருந்து கேகாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள், 27 மற்றும் 36 வயதுடைய தல்துவ பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த இருவரும் படு காயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் 42 மற்றும் 43 வயதுடைய தல்துவ பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

