
மனித புதைகுழி அகழ்வில் ஊடகங்களுக்கு முட்டுக்கட்டை
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஊடகங்கள் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை சந்தேகங்களையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவலை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத தமிழ் மக்களுக்கு இவ் அகழ்வு பணிகள் ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தை நேற்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்
ஆவணப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. குற்ற வழக்குகளிலே இவை தான் சாட்சியம். சாட்சியத்தை பெற்று நீதிமன்றத்தின் முன்பாக வைக்கும் வரை ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதில் சிறிய தவறேதும் ஏற்பட்டால் அது குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு மிகப்பெரிய அளவிலே உதவும்.
அந்தவகையிலே எந்தவிதமான ஒளிவுமறைவின்றி காத்திரமான விடயங்களை தேடி ஆவணப்படுத்தல் அத்தியவசியம் என அனைவரும் எதிர்பார்க்கின்றோம்.
இன்று (நேற்ற) புதைகுழி அகழ்வுகள் நடைபெறுகின்ற போது அதனை ஆவணப்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. அகழ்வு ஆரம்பிக்க முன்னும், மதியம் ஓய்வு பெறுகின்ற போதும், மாலை முடிவடைந்த போதும் செய்தி சேகரிக்க அனுமதித்திருக்கிறார்களே தவிர சாட்சியங்களை சேகரிப்பதற்குரிய முறைகள் சரியாக நடைபெறுகின்றதா? இல்லையா? என்பதனை உலகத்திற்கு அதனை ஆவணப்படுத்துவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புதைகுழிகள் கண்டறியப்பட்ட காலப்பகுதியில் இருந்தே கணிசமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இருப்பினும் அகழ்வு பணிகளின் போது ஊடகங்களின் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டிருப்பது சந்தேகத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.
அகழ்வில் மீட்கப்படுவதை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், அகழ்வு நடைபெற்றதன் பின் ஆய்வு செய்யும் பணி உண்மையில் அனைத்து தரப்பினர்களும், விஷேடமாக பாதிக்கப்பட்ட தரப்புகள் நம்பிக்கையை கொடுக்கும் வகையில் அமைய வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை.
குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற குறைந்தளவு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்பது அத்தியவசியம்.
தமிழ் மக்கள் மத்தியில் உள்நாட்டிலே நம்பகத்தன்மையான, வெளிப்படைத்தன்மையான விடயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை அறவே இல்லாத இடத்தில் இவ்விடயம் எவ்வளவு தூரத்திற்கு தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே.
சர்வதேச விசாரணையின் ஊடாக மட்டுமே இதனை முடிவுக்கு கொண்டுவரலாம் என்ற விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் நடைபெறுகின்ற சூழலிலே இதனை ஐ.நா மட்டத்திலே பெரிதுபடுத்தி முடிவை எட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என்றார்.

