‘புத்த தேவா!’ எங்களை மன்னிப்பாயா?’

‘புத்த தேவா!’ எங்களை மன்னிப்பாயா?’

-அஜந்தி-

20.05.2009

“அம்மே!……. அம்மே!……”
உற்சாக அழைப்புடன் அம்மாவைத் தேடி வந்த விதானகே, தாய் இருந்த நிலை கண்டு பதட்டமானான்.
“அழுகிறாவா….? ஏன்….? அதுவும் இன்றைய தினசரிப் பத்திரிகையைக் கையில் பிடித்தபடி…”
ஓடிப்போய் அம்மாவுக்கு முன்பாக முழந்தாளிட்டு உட்கார்ந்தபடி,
“என்னம்மா…? ஏன் அழுகிறீர்கள்….? ஏதாவது கவலை தரும் செய்தியா…?”
அன்னை பதிலேதும் சொல்லாமல், தினசரியில் தான் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்தை அவனிடம் நீட்டினார்.
அங்கே…..
பிஸ்கட்டைச் சுவைத்தபடி, மண்மூடைக் காப்பரண் மீது உட்கார்ந்திருக்கும் ஒரு சிறுவனுடைய படம்! சாந்தம் தவழும் கண்களுடன், கள்ளம் கபடமற்ற அழகிய முகம்.
“இதுவா….? இந்தப் படத்தைப் பார்த்தா அழுதீங்கள்..?” என்று கேட்பது போன்ற பாவனையில், படத்திலிருந்து கண்களை விலக்கி அம்மாவைப் பார்த்தான்.
அம்மாவின் தலையசைப்பில் “ஆம்!” என்ற பதில் தெரிய,
“யாரம்மா இந்தப் பையன்…? அவன் படத்தைப் பார்த்து ஏன் அழுகிறீர்கள்….? சொல்லுங்கள் அம்மா…. இது யார்?”
“அந்த மனிதரின் பிள்ளை….!”
“ ‘அந்த மனிதர்’ என்றால் யாரவர்? அவருடைய பிள்ளையின் படத்தைப் பார்த்து நீங்கள் ஏன் அழவேண்டும்? “
விதானகேயின் கையிலிருந்து பத்திரிகையை இழுத்தெடுத்த அம்மா, மற்றுமொரு பக்கத்தை விரித்துக் காட்டுகிறா.

காற்சட்டை மட்டும் அணிந்திருக்க- மார்பில் அங்குமிங்கும் துப்பாக்கிச் சூடுகளின் அடையாளமாய் ஆறேழு துளைகள் தெரிய, மல்லாந்து கிடக்கும் அதே சிறுவனுடைய படம்!!
அதைப் பார்த்தவுடன் செய்திக் குறிப்பின் மீது அவசர அவசரமாகக் கண்களை ஓடவிட்டான் விதானகே. படித்து முடித்தபோது அவனது முகத்தில் ஒரு வெற்றிச் சிரிப்பு!

“நான் என்னவோ ஏதோ என்று நினைத்தேன். போயும் போயும் ஒரு தமிழ்ச் சிறுவனுக்காக,…. அதுவும் அந்தக் கிரிமினலின் ( criminal ) பையனுக்காக நீங்கள் இப்படிக் கவலைப்படுவது விசித்திரமாயிருக்கிறது!”
“விதானகே!!….. நிறுத்து!….. வாயை மூடு!!….. யாரடா கிரிமினல்…?”

இந்தளவுக்கு அம்மாவின் குரல் உச்சம் தொட்டது இதுவே முதல் தடவை. அந்தக் குரலில் அன்பையும் கனிவையும் மட்டுமே கண்டவன், இப்படியொரு கோபத்தையும் உக்கிரத்தையும் இதுவரை காலமும் பார்த்ததே இல்லை.

விதானகே வெலவெலத்துப் போனான். இருபத்து மூன்று வருட வாழ்க்கையில் அம்மா இப்படிக் கோபப்பட்டது இன்று முற்றிலும் புதிது.

அப்படியே கீழே உட்கார்ந்து விட்டான். உடலும் கைகளும் லேசாய் நடுங்கிக் கொண்டிருந்தன.

சில நிமிடங்கள் வெறித்த பார்வையுடன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அம்மா, மகனுக்கு முன்னால் உட்கார்ந்து அவன் முகத்தை உற்றுப் பார்த்தா.
“உனது பெயர் என்ன…?”
“என்ன இது…? என்னிடம் பெயர் கேட்கிறா…. அம்மாவுக்கு மனநிலை ஏதும் சரியில்லாமல் போய்விட்டதா…. ?”
“விதானகே..”
“அது மட்டும் தானா…?”
“இல்லை….. கரன் விதானகே…”
“எங்கள் இனத்தில் யாருமே வைக்காத- சம்பந்தமில்லாத- இந்த கரன் என்ற பெயரை எனது பெயருடன் சேர்த்து ஏன் வைத்தீங்கள் என்று அடிக்கடி என்னிடம் கேட்பாயே…… நினைவிருக்கிறதா…??”

“அதை என்றுமே நீங்கள் சொன்னதில்லையே அம்மா….. நேரம் வரும்போது சொல்லுவேன் என்றுதானே சொல்லுவீங்கள்…?”
“ஆமாம்… இப்போது அந்த நேரம் வந்துவிட்டது……. அதைப் புரிந்து கொள்ளக் கூடிய வயசும் உனக்கு வந்துவிட்டது….. சொல்கிறேன்… அதற்கு முன், சற்று முன், ‘கிரிமினல்’ என்று நீ குறிப்பிட்டாயே ஒருவர்,
….. நீ எங்கள் பிள்ளையாகக் கிடைப்பதற்குக் காரணமாய் இருந்தவரே அந்தக் ‘கிரிமினல்’தான் என்பதை முதலில் உனக்குச் சொல்லி விடுகிறேன்……”

“என்ன இது….? இப்படியொரு புதிரைத் தூக்கிப் போடுறா? நான் பிறப்பதற்கு அந்தக் கிரிமினல்- அதாவது, அம்மாவின் பாசையில் ‘அந்த மனிதர்’ – தான் காரணம் என்றால், அது எப்படி… என்ன குழப்பம் இது…?”
தொடர்ந்து அன்னை சொல்லப் போவதைக் கேட்பதற்கு மகன் ஆர்வமாகினான்.

                              *****

“போர் நடவடிக்கை ஒன்றுக்காக யாழ்ப்பாணம் போக வேண்டி ஏற்பட்டதால், ராணுவ சேவையிலிருந்த உனது அப்பா, எங்களுக்குத் திருமணமாகி இரண்டு மாதங்களிலேயே என்னைப் பிரிந்து செல்ல நேரிட்டது. உக்கிரமாக நடந்த அந்தச் சண்டையின் போது, அவர் போராளிகளால் சிறைப்பிடிக்கப் பட்டார்…..

         சில காலம் கடந்தது.

….நீண்ட கால சிறைவாசம் ஏற்படுத்திய விரக்தியினால், என்னை ஒரு தடவை சந்திக்கும் வாய்ப்பைத் தனக்குத் தரும்படி உனது அப்பா, சிறைக் காவல் போராளிகள் ஊடாக தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கடிதம் அனுப்பினாராம்….
( இதை உனது அப்பா பின்னர் என்னிடம் சொன்னார்..)
…..ஒரு நாள்… எனக்கு ஒரு கடிதம் வந்தது.

….நான் விரும்பினால் யாழ்ப்பாணத்துக்கு வந்து, சிறையிலிருக்கும் எனது கணவரைப் பார்த்துத் திரும்பலாம் என்று அந்தக் கடிதம் அனுமதி வழங்கியிருந்தது….. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை…. மறுநாளே, அனுராதபுரத்திலிருந்து புறப்பட்டு ரயில் மூலம் யாழ்ப்பாணம் போனேன்….. உனது அப்பா இருந்த இடத்திற்கு போராளிகள் என்னைக் கூட்டிப் போனார்கள்……

…..திருமணமான கையோடு ஏற்பட்ட பிரிவு….. ஒருவரை ஒருவர் காணவேண்டும் என்று அதுவரை நாளும் எம் இதயங்களில் தேங்கிக் கிடந்த ஆவல்…..
…..பேச வேண்டிய எத்தனை எத்தனையோ விடயங்களை அன்று இருவரும் பேசித் தீர்த்தோம்….
…..மாலைப் பொழுதாகி விட்டது….. மீண்டும் அனுராதபுரம் செல்லும் ரயிலைப் பிடிக்க வேண்டும்…… பிரிய மனமின்றிப் புறப்பட்டேன்…. போராளிகள் ரயில் நிலையம் வரை என்னைப் பாதுகாப்பாகக் கூட்டிப் போனார்கள். ஆனால், என்ன காரணத்தினாலோ அன்றைய மாலைக்கான ரயில் சேவை ரத்தாகியிருந்தது…..”

“ஓ!….அப்போ அந்த ரயில் நிலையத்திலேயே அன்றிரவு தங்கி இருந்தீங்களா…?”
“இல்லை மகனே! அவர்கள் என்னை அப்படி விடவில்லை. திரும்பவும் என்னைத் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள்…”
“ம்… பிறகு…?”
“இரவு என்னை எங்கே தங்க வைப்பது என்று அவர்கள் யோசித்தார்கள்….. அந்த இடத்துக்கு சமீபமாகப் பெண் போராளிகளின் முகாம் எதுவும் இருக்கவில்லை… எனவே, இது பற்றித் தலைவரிடம் அறிவித்து, மேற்கொண்டு என்ன செய்வது என்று அவர்கள் கேட்க,
“அந்தப் பெண்மணி எந்த இடம் தனக்குப் பாதுகாப்பு என்று நினைக்கின்றாவோ, அந்த இடத்தில் தங்க வைக்கவும்.” என்று அவர் பணித்து விட்டார்.
…..எனது கணவருடன் சிறையிலேயே நான் தங்குவதாக என் விருப்பத்தைக் கூறியபோது, அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு என்னை அங்கேயே தங்க அனுமதித்தார்கள்.

“பயங்கரவாதிகள் என்று சொல்லப் படுகின்றவர்களிடம் இப்படிப்பட்ட நல்ல குணங்கள் இருக்குமா? என்னால் நம்ப முடியவில்லை அம்மா!!”
“மிகுதியையும் சொல்கிறேன்… கேள்… மறுநாள் காலை விடிந்த போது, எல்லோருக்கும் நன்றி சொல்லிப் புறப்பட்ட என்னைப் போராளிகளே மீண்டும் ரயில் நிலையத்தில் கொண்டு போய் விட்டார்கள்…..

….அடுத்து வந்த இரண்டு மாதங்களில், எனது வயிற்றில் நீ வளர்ந்து கொண்டிருந்தாய் என்பதை உணர்ந்து கொண்டேன். எந்த ஒரு பெண்ணுடைய வாழ்க்கையிலும் உச்சக்கட்டமான ஒரு சந்தோசம் அது…. ஆனால்…. அந்த சந்தோசத்தை வெளியே சொல்ல முடியாத சூழ்நிலை….” ஒரு நீண்ட பெருமூச்சு அம்மாவிடமிருந்து வெளிப்பட்டது.
“ஏன் சொல்ல முடியவில்லை…?”
“கணவர் சிறையில் இருக்கும் போது நான் இங்கே எப்படி கர்ப்பமாகினேன் என்ற கேள்வி வரும்! பலரும் எனது ஒழுக்கத்தைப் பற்றி பிழையாகக் கதைப்பார்கள்….”

“ஓ….. அது பற்றி அதன் நினைத்துப் பார்க்காமல் கேட்டுவிட்டேன்…. உண்மைதான்… உங்களுடைய நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று உணர முடிகிறது….”
“….எனது மாமியார் – அதுதான் உனது பாட்டி – என்னை நம்பினார்…. ஆனால் மற்றவர்களிடம் இதை எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? எனக்குள் ஒரே குழப்பம்….. எனது இந்த நிலையைப் பற்றி விரிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதி பிரபாகரனின் பார்வைக்காக அனுப்பி வைத்தேன்…..
….பதில் கடிதம் வந்தது..”
“என்ன பதில் போட்டார்கள்….?” ஆவலை அடக்க முடியாமல் விதானகே கேட்டான்.
“என்னுடைய மாமியாரையும் எங்களுடைய மதகுரு ஒருவரையும் கூட்டிக்கொண்டு அங்கே வந்து போகும்படி எழுதியிருந்தது. அதன்படி மூவரும் அங்கு போனோம். உனது அப்பாவின் மூலமாகவே எல்லா உண்மைகளும் விபரங்களும் மதகுருவிற்கும் உனது பாட்டிக்கும் தெரியப் படுத்தப் பட்டது……
…ஆனால் இதுவும் எனக்குத் திருப்தி தரவில்லை…..”
“ஏன் அம்மா….?”
“ஊர் மக்கள் நம்புவார்களா…? நாம் கூறுவது பொய் என்று நினைத்து, தொடர்ந்தும் என்னை ஒரு குற்றவாளியாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டால்…? இதை நினைக்க என்னால் தாங்க முடியவில்லை. கண்ணீர் விட்டு அழுதபடி அந்தப் போராளிகளிடம் எனது நிலைமையை விளக்கிச் சொன்னேன்…..

……நான் இப்படித் துன்பப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுத செய்தி உடனடியாகத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டது…..
……சிறிது நேரத்தில்….” இப்போது இடைநிறுத்திய அம்மா கண்கள் மூடிக் கைகள் கூப்பிக் கும்பிட்டா.
‘அம்மா என்ன சொல்லப் போகிறா? என்னதான் நடந்திருக்கும்?’ என்பதை அறிய விதானகேயின் உள்ளம் பரபரத்தது.

“….சிறிது நேரத்தில் அங்கே வந்த போராளிகள், எனது கணவரை விடுதலை செய்வதாகவும், அவரை எம்முடன் கூட்டிப் போகலாம் என்றும், தங்கள் தலைவருடைய பணிப்பின் பேரிலேயே இது நடைமுறைப்படுத்தப் படுவதையும் தெரிவித்தபோது, நான் அடைந் மகிழ்ச்சிக்கு இந்த உலகமே ஈடாகாது….”

அம்மாவின் கண்கள் கலங்கியிருந்தன. தொடர்ந்தா….
“அன்று மட்டும் எனது கணவர் விடுதலை செய்யப்பட்டிருக்கா விட்டால், ஊருக்குத் திரும்பியவுடன் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவோடுதான் இருந்தேன். நீயும் பிறந்திருக்க மாட்டாய்….”
சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அசாதாரணமாக நிலவிய அந்த மௌனத்தை அம்மாவே கலைத்தா.
“….. அந்த மனிதர் என்னை ஒரு சிங்களப் பெண்ணாகப் பார்க்கவில்லை. ஒரு சகோதரியாக மட்டுமே பார்த்தார்…. எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத ஒரு களங்கம் எனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கரிசனையின் பேரில் தான் அந்த முடிவை எடுத்துச் செயற்படுத்தினார்…..
……நீ நினைப்பது போல அந்த மனிதர் ஒரு கிரிமினலும் அல்ல…. பலரும் சொல்வதுபோல அவர்கள் பயங்கரவாதிகளும் அல்லர்.
…..அவர்கள் போராளிகள்…. தங்களுடைய விடுதலைக்காகப் போராடுபவர்கள்…..”

அவனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. கீழே கிடந்த தினசரியை எடுத்து, மீண்டும் அந்தப் பக்கத்தின் மீது பார்வையை ஓடவிட்டான்.

வெற்று மார்பில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த துளைகளுடன் மல்லாந்து கிடக்கும் அந்த ஏதுமறியாச் சிறுவனுடைய படம் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்து தெறிக்கிறது.

         “புத்த தேவா!! எங்களை மன்னிப்பாயா??”

 
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )