உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எங்கிருந்து திட்டமிடப்பட்டது; “செனல் 4“ ஆணவப்படத்தால் அதிர்ந்த இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எங்கிருந்து திட்டமிடப்பட்டது; “செனல் 4“ ஆணவப்படத்தால் அதிர்ந்த இலங்கை

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்புலம் தொடர்பான ஆவணப் படம் ஒன்றை பிரித்தானியாவின் “செனல் 4“ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதுடன், இந்த காணொளி இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“செனல் 4“ வெளியிட்டுள்ள ஆவணப்  படத்திற்கு SRI LANKA’S EASTER BOMBINGS:DISPATCHES எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Sri Lanka Easter bombings

குறித்த ஆவணப்படம் 47 நிமிடங்களும் 09 செக்கன்களையும் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணப்படம்,  ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகள் மற்றும் தாக்குதல் காட்சிகளுடன் ஆரம்பமாகிறது.

பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் பலரின் கருத்துக்கள் ஆவணப் படத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

“அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காவும் நாட்டை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து கொள்வதற்காகவுமே குறித்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன“ என அந்த ஆவணப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளராக இருந்து தற்போது சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளவரான அசாத் மௌலானா பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கையின் மூத்த புலனாய்வுத் தலைவர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக அசாத் மௌலானா “செனல் 4“ வின் ஆவணப்படத்துக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்,

இந்த தாக்குதல்கள் ஓரிரு நாட்களில் திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல.

இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் முழுமையாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் ஆகும்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் மறுக்க முடியாத ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவைக் கொல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Lasantha Vikramadunga

மத தீவிரவாதத்தில் ஈடுபட்ட சிறைச்சாலை கைதிகளை சந்தித்து பேச்சுவார்தை நடத்துமாறு பிள்ளையான் என்னிடம் கூறினார்.

அதற்கமைய  தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த சஹாரான் ஹாஷிமின் சகோதரர் மௌலவி சைனி ஹாஷிமை  நான்  சந்தித்தேன்.

மௌலவி சைனி ஹாஷிம் எமக்கு மிகவும் பயன்படுவர் என  பிள்ளையான் என்னிடம் தெரிவித்தார்.

பிள்ளையானின் ஆலோசனையின்படி சட்டத்தரணி ஒருவரை நியமித்து சிறையில் இருந்த மௌலவி சைனி ஹாஷிமை பிணையில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

பின்னர் 2018ம் ஆண்டு ஜனவரி , அந்தக் குழுவிற்கும் அரச புலனாய்வு சேவையின் தற்போதைய தலைவர் மேஜர் ஜெனரால் சுரேஷ் சலேக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு பிள்ளையான் எனக்கு கட்டளையிட்டார்.

அதன் பின்பு கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்  சுரேஷ் சாலேவுக்கும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சைனி ஹாஷிம் மௌலவிக்கும் இடையிலான கலந்துரையாடல் கரடிப்புவல் (Karadipuval) எனும் இடத்தில் தென்னந்தோப்பு ஒன்றில்  அமைந்துள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலுக்கு சைனி ஹாசிம் மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் வெள்ளை வேனில் குறித்த இடத்திற்கு வருகை தந்தனர்.

இக்கலந்துரையாடலில் சுரேஷ் சலே, ராஜபக்சக்களால் நாட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 Sri Lanka Easter bombings

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு அதுவே ஒரே வழி எனவும்  சுரேஷ் சலே கூறினார்.

குறித்த கலந்துரையாடலில் சஹாரான் ஹாஷிமின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் அன்றைய தினம் காலை எனக்கு  சுரேஷ் சாலேவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

Suresh Sale

தான் மட்டக்களப்பில் இருப்பதாகவும் என்னை உடனடியாக  தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குச் செல்லும்படியும்  கூறினார்.

அங்கு நபர் ஒருவர் தங்கியிருப்பதாகவும், அவரை உடனடியாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வெளியேறுமாறும் சுரேஷ் சலே என்னிடம் கூறினார்.

மேலும் அந்த நபர் விரும்பும் இடத்தில் இறக்கிவிடுமாறு என்னிடம் சுரேஷ் சாலே கூறினார்.

நான் அவரை வாகனத்தில் ஏற்ற சென்ற வேளையில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அதனை தொடர்ந்து சிறிது நிமிடங்களில் அதாவது 8:50 மணியளவில் சஹரானின் குழு உறுப்பினர் ஒருவருக்கும் தொலைபேசி அழைப்பு வந்தது.

பெரும்பாலும் நான் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றது  சஹரானின் குழு உறுப்பினர் ஒருவர் என நம்புகிறேன்.

CCTV - Taj Samudra

இந்த  சீசிடிவி காட்சிகள் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தாக்குதல் நடந்த அன்று சனல் 4  நிறுவனம் பெற்றுக்கொண்டதாக குறித்த  ஆவண படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தொலைபேசி அழைப்பு வந்த இரண்டு நிமிடங்களில், குறித்த நபர் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து தாக்குதல் நடத்தாமல் வெளியேறினார் என்று “சேனல் 4 ” இல் ஒளிபரப்பான சீசிடிவி காணொளி காட்சியில் பார்க்கக்கூடியதாக உள்ளது.

CCTV - Taj Samudra

தொடர்ந்து  அம்பாறை – சாய்ந்தமருதில் சஹரான் ஹாசிமின் சகோதரர் சைனி தற்கொலை செய்து கொண்டார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில்  நான் பிள்ளையானுடன் பேசினேன்.

என்னை வாயை மூடி மௌனமாக இருக்குமாறு அவர் எச்சரித்தார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணியையும் அனைத்தும் உண்மைகளையும் தெரிந்த என்னை கொலை செய்து விடுவார்கள் என அஞ்சி நான் இலங்கையை விட்டு வெளியேறினேன்“  என அசாத் மௌலானா “செனல் 4” ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிலிருந்து தப்பிச் சென்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பது இதுவே, முதல் முறை என அசாத் மௌலானா சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஆவண படத்தில் இலங்கையில் நடைபெற்ற  யுத்தம் மற்றும் கடந்த 2005ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றமை போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

யுத்தத்தின் போது ராஜபக்ஷக்களின் ஆட்சியின் கீழ் நடந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உள்ளடங்கிய காணொளிகளும் உள்ளன.

அத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் நிலையத் தளபதி நிஷாந்த சில்வா, ” செனல் 4 “வின் இந்த ஆவணப்படத்தில் தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் தாம் நடத்திய விசாரணைகள் குறித்து நிஷாந்த சில்வா இந்த ஆவண படத்தில் தெரிவித்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்ததாக நிஷாந்த சில்வா கூறியுள்ளார்.

Nishantha Silva

மேலும் தனது பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிட விரும்பாத அரச அதிகாரி அந்த ஆவண படத்தில் கூறியுள்ளதாவது,

‘சுரேஷ் சலே கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து  இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகள் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவியவந்தது.

 Sri Lanka Easter bombings

எவ்வாறாயினும், உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் புலனாய்வு அமைப்புகள் இது குறித்து தவறான தகவல்களை வழங்கியதாக ” செனல் 4 “ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு இருந்ததை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்தது. 

சுரேஷ் சலே இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்து  அதன் பொறிமுறையை இயக்கினார் என்றும் அவர் இந்த தாக்குதல்களுக்கு உதவியாக இருந்தார் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி தெரிவித்துள்ளார்.

 Sri Lanka Easter bombings

தான் மீதான இந்த குற்றசாட்டுகளை சுரேஷ் சலே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினருடன் தான் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது எனவும் அந்த சமயத்தில் தான் மலேசியாவில் இருந்ததாகவும் , உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது இந்தியாவில் இருந்ததாகவும் சுரேஷ் சலே சனல் 4விற்கு தெரிவித்துள்ளார்.

மேலும் தான்  2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Suresh Sale

இந்த ஆவணப்படத்தின் உள்ளடக்கம் தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிள்ளையானும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக “சேனல்  4 ” தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இந்திய உளவுத்துறை இரண்டு வாரங்களுக்கு முன்பு தகவல் வழங்கியதையும் இந்த ஆவணப்படம் மூலம் “செனல் 4” நினைவுபடுத்தியுள்ளது.

தொடர்ந்து உயிர்த்தஞாயிறு தாக்குதலில்  பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆவணப்படத்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற  ஜனாதிபதித் தேர்தலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் குறித்தும் உண்மைத்தன்மையை முன்வைக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தும் காணொளியும் இதில் உள்ளடங்கியுள்ளது.

Pope Francis

அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி கவிழ்ப்பும் நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் இந்த ஆவண படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவண படத்தின் நிறைவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் உண்மைத்தன்மையை  இலங்கை பாராளுமன்றத்தின் சிறப்புக் குழு விசாரணை நடத்தியதாக “செனல் 4“ தெரிவித்துள்ளது. 

video
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )