கடந்த தேர்தலில் முஸ்லிம்கள் அடுத்த தேர்தலில் தமிழர்கள்; தேர்தலில் வெற்றி பெற இன முறுகலை தூண்டும் முயற்சி என்கின்றார் சாணக்கியன் எம்.பி.

கடந்த தேர்தலில் முஸ்லிம்கள் அடுத்த தேர்தலில் தமிழர்கள்; தேர்தலில் வெற்றி பெற இன முறுகலை தூண்டும் முயற்சி என்கின்றார் சாணக்கியன் எம்.பி.

பௌத்தர்களையும் தமிழர்களையும் ஒரு முறுகல் நிலைக்குள் கொண்டுசென்று தாங்கள் ஆட்சிக்கு வரலாமா என்ற முதல்கட்ட ஆய்வு முயற்சியாக வடக்கு கிழக்கிலே சில சம்பவங்களை இடம்பெறுவதனை பார்க்க கூடியதாக இருப்பதாக என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு கிழக்கில் அண்மைக் காலமாக மதரீதியாக பிக்குமாருக்கும் இந்துக் குருமாருக்கு இடையில் முறுகல் நிலைகள் ஏற்பட்டு வருகின்றன. அண்மையில் கூட திருகோணமலையில் ஜனாதிபதியும் இந்தியாவும் செய்த சில ஒப்பந்தங்களைப் பற்றி சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்திலே குருந்தூர் மலையிலே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் ஆளுநருடைய அலுவலகத்துக்குள் அடாவடித்தனமாக பிக்குமார்கள் சென்றனர்.

இதிலும் குறிப்பாக தென்னிலங்கை ஊடகம் அதுவும் ஜனாதிபதியின் ரணில் விக்ரமசிங்கவினுடைய சகோதரனுடைய ஊடகம் புதிதாக முகப்புத்தக பக்கம் ஒன்றினை திறந்து அதிலே குறிப்பிட்ட அளவில் பிக்குமார்களுக்கும் வடக்குக் கிழக்கிலே நடக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் வழங்குகின்றது.

நாட்டிலே மக்கள் மத்தியிலே எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமல் போனது, மின்வெட்டு நிறுத்தப்பட்டது போன்ற விடயங்களுக்கு கடந்த ஒரு வருடமாக எதுவாக இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஆட்சியிலே மின்சாரம் துண்டிக்கப்படவில்லை, எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது, எரிவாயு இருக்கின்றது என்று எல்லாம் மக்கள் ஒரு அளவு தங்களுடைய வாழ்க்கையிலே பிரச்சினை குறைந்தது என்று ஒரு மனநிலை இருந்தாலும் கூட எதிர்வரும் வருடத்தில் குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்திலே முன்வைத்த விடயங்களை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட போகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைத்த சில நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்தினால் அடைய முடியாத ஒரு சூழல் காணக் கூடியதாக இருக்கும்.அவ்வாறு நடந்தால் எதிர்வரும் வருடத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்களுடைய வாக்குகளைப் பெற முடியாத சூழல் அமையலாம்.

அதற்காகத்தான் இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டுக்குள்ளே குழப்ப நிலையினை உருவாக்குவதற்கு இந்த சர்வ கட்சி மாநாடுகளை நடத்தினார் , அவர் எதிர்பார்த்த வண்ணம் அந்த 13 ஆவது திருத்தச் சட்ட விடயம் மாபெரும் பூகம்பமாக மாறவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி தர்கா நகர், அளுத்கம, திகன போன்ற இடங்களில் இஸ்லாமிய மக்களை குறி வைத்து தாக்கி அவர்களுக்கு எதிராக இனவாத பிரசாரங்களை செய்தே கடந்த தேர்தலில் வெற்றிபெற்றார்கள். இம்முறையும் மக்கள் இந்த பொய்யை மீண்டும் நம்புவார்களா என்ற சந்தேகம் இருக்கின்ற காரணத்தினால் முதல்முறையாக சைவ சமய வழிபாடு செய்யும் தமிழ் மக்களுக்கும் பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்கள மக்களையும் ஒரு முறுகல் நிலைக்கும் தள்ளிவிட்டால் இதை வைத்துக்கொண்டு தாங்கள் ஆட்சிக்கு வரலாமா என்கின்ற ஆய்வு செய்வதற்கான முதல்கட்டபடியாக தான் கடந்த மாதத்துக்குள்ளே நாங்கள் வடக்கு கிழக்கிலே நடந்த சில சம்பவங்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது.

நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தினுடைய பரிந்துரைகளை சரியாக நடைமுறைப்படுத்தாமல் போய் இந்த நாடு பொருளாதார ரீதியாக இன்னமும் சிக்கலை முகம்கொடுக்கின்ற போது மதரீதியாக ஒரு வன்முறையை, குழப்பத்தை உண்டாக்கி அதனை பயன்படுத்தி அதன் ஊடாக ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுக்கலாம் அதிலேயே வெற்றி பெறலாம் என்கின்ற நம்பிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளதா என்ற கேள்வி இன்று எனக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )