
மைத்திரிக்கு எதிராக கட்சிக்குள் போர்க்கொடி
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் மூன்று சிரேஷ்ட உப தலைவர்கள் இணைந்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறு நாளுக்கு நாள் நலிவடைந்து வருகின்றது என்பதை அவர்கள் உண்மைகளுடன் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர, சிரேஷ்ட உப தலைவர்களான ஷான் விஜயலால் டி சில்வா, அங்கஜன் இராமநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
2014 இல் திரு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன் வந்து, 2015 இல் ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்பட்டமை மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட சிலர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்தமைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாமை போன்றன கட்சியை பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா அல்லது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பதை அடையாளம் காண முடியாத ஒரு அடையாள நெருக்கடி நிலவுவதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

