காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம்; வடக்கு கிழக்கில் 8 மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம்; வடக்கு கிழக்கில் 8 மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் நேற்று புதன்கிழமை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்னெடுத்த போராட்டத்தில் வடக்கு கிழக்கை சேர்ந்த 8 மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு மாகாணத்தில் மன்னாரிலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாணத்தில்…

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வடக்கில் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகரில் உள்ள சதொச மனித புதைகுழி பகுதியில் ஆரம்பமானது.

குறித்த போராட்டத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி , முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ,திருகோணமலை, அம்பாரை,மட்டக்களப்பு ஆகிய 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள்,உட்பட அரசியல் பிரதி நிதிகளும் இணைந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி க்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக ஓ.எம்.பி அலுவலக வீதியை சென்றடைந்தது.பின்னர் அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கருத்துக்கள் வெளியிடப் பட்டதோடு,மகஜர் பொது வெளியில் வாசிக்கப்பட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தலைமையிலான அருட்தந்தையர்களிடம் கையளித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் …

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கிழக்கில் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

‘சர்வதேச நீதிப்பொறிமுறையில் எங்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடு’ என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற போராட்டத்தில் வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து பேரணியானது ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபி வரையில் சென்றது.அங்கு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிய கொடவின் மனைவி சந்தியா எக்னலிய கொட தலைமையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் ஒளியேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அங்கு நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சர்வதேச நீதிகோரிய பல்வேறு பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக அமைப்புகள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மகளிர் அமைப்புகள்,இளைஞர் அமைப்புகள்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் இறுதியில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டதை தொடர்ந்து அதனை ஐக்கிய நாடுகள் சபை உட்பட தூதரகங்களுக்கு அனுப்பிவைக்க கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )