
இலங்கை மற்றும் இந்தியா இடையே பாலம் அமைப்பதற்கு முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பை கோரும் கர்தினால்
இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் பாலம் ஒன்று அமைக்கப்படுமாயின், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்களின் விருப்பத்தினை பெறவேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
ராகம தேவத்த பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிறு ஆராதனையில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரலாற்று ரீதியாக ஆட்சியாளர்களே நாட்டை வெளிநாட்டவர்களுக்கு காட்டிக் கொடுத்து வருவதாக கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சியாளர்கள் நாட்டை பல்வேறு நாடுகளுக்கும் படைகளுக்கும் விற்று பல்வேறு முட்டாள்தனமான முடிவுகளை எடுத்து, நாட்டை அழிவை நோக்கி இட்டுச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருகாலத்தில் இந்தியாவினால் இலங்கை சில விடயங்களை அவர்களின் கருத்துக்களின் அடிப்படையிலே செயற்படுத்துவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், இவை அனைத்தும் முட்டாள்தனமாக கதைகள் எனவும் கர்தினால் கூறியுள்ளார்.
இலங்கை எப்போதும் சுதந்திர நாடாகவே இருந்து வருகிறது எனவும், இலங்கை எந்தவொரு மாநிலத்திற்கும் அடிமையாக இருந்ததில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பொருளாதார ஒப்பந்தங்களை நாட்டின் ஆட்சியாளர்கள் கையாண்டபோதும், எந்தவொரு நபரையும் அடிமையாக மாற்றவில்லை எனவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பாலத்தினை அமைப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய கர்தினால் நாட்டிற்காக மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுதந்திரம் பெற்ற நாம் தற்போது சுதந்திரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தற்போது அனைத்து நாடுகளுக்கும் ஆயிற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தினை வழங்க வேண்டுமெனவும், இதற்காக நாட்டு துண்டு துண்டாக உடைக்கும் நிலையில், எமக்கு எதுவும் எஞ்சப்போவதில்லை எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

