பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? யாருமே அறிவிக்கவில்லை

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? யாருமே அறிவிக்கவில்லை

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் இனவாத முரண்பாடுகள் ஏற்படும் ஆபத்து தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளோ மற்றும் நிறுவனங்களோ இலங்கைக்கு எதுவுமே அறிவிக்கவில்லை.ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தரப்பினர் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக இனவாத, மதவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக எமது புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து பேசுகையில்,

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறவுள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் பல மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்கள்.

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது தொடர்பிலோ இனவாத முரண்பாடுகள் ஏற்படும் ஆபத்து தொடர்பிலோ வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளோ நிறுவனங்களோ இலங்கைக்கு எதுவுமே அறிவிக்கவில்லை. இதனை நான் மிகவும் பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன்.அத்துடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படும் வதந்திகளுக்கு எம்மால் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது.

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தரப்பினர் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக இனவாத, மதவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக எமது புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளார்கள்.அதனால் இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

முல்லைத்தீவு மணல் குடியிருப்பு என்ற முகவரியில் வசிக்கும் அன்டனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் குருந்தூர் மலை விவகாரம் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளார்.செயற்படுகிறார். இவர் ஒரு கத்தோலிக்கர் .குருந்தூர் மலை விவகாரத்தில் இவருக்கு என்ன பிரச்சினை என்பதே எமக்கு பிரச்சினையாக உள்ளது.இவர் பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

குருந்தூர் மலை விவகாரம் குறித்து தற்போது பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.குருந்தூர் புராதன பூமியை கொண்டு பௌத்த மதத்தின் எதிர்காலமும்,இந்து மதத்தின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படாது என்பதை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.30 வருட கால யுத்தம்,உயிர் மற்றும் சொத்து சேதம் ஆகிய தாக்கங்களை அனுபவித்தும் இன்றும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

இரு தரப்பிலும் உள்ளவர்கள் இனவாத முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )