
சர்வ மதத் தலைவர்களை சிறைப்பிடித்த பிக்குவின் செயலை கண்டித்து மட்டு.நகரில் போராட்டம்
பௌத்த மதகுரு தலைமையிலான சட்ட விரோத காணி அபகரிப்பாளர்களினால் மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதியில் ஊடகவியலாளர்கள் சர்வ மதத் தலைவர்கள் குடிசார் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டமையை வன்மையாக கண்டித்து மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத் தலைவி அமலநாயகி தலைமையில் மட்டக்களப்பு திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத்தினால் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த சில வருடங்களாக மட்டக்களப்பின் எல்லை பகுதிகள் பெரும்பான்மையினத்தவர்களினால் ஆக்கிரமிக்கப்படுகின்றது இதனால் பண்ணை தொழிலாழிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நேற்றைய தினம், மாதவனை மயிலத்தமடு பகுதியில் உள்ள பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பண்ணையாளர்களின் அழைப்பின் பேரில் நேற்றுமுன்தினம் மயிலத்தமடுவிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் பல்சமய தலைவர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தடுத்து வைக்கப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளிலிருந்து ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளது இச்செய்தி வெளிவரக்கூடாது எனக் கூறி வெற்றுத்தாலில் கையெழுத்து பெற்றமை ஊடகத் துறைக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரும் சவாலாகும்.இராணுவத்தினராலும் புலனாய்வு பிரிவினாலும் தமிழ் ஒட்டுக் குழுக்களாலும் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் ஊடகவியலாளர்கள் உட்பட சமூக செயற்பாடுகள் தற்போது இனவாதம் கொண்ட காவி உடைதரித்த பிக்குகளினாலும் காடையர்களாலும் புதிதாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக தொடங்கியுள்ளனர்.
அதேவேளை எமது பெரும் மதிப்புக்குரிய மதத்தலைவர்களான சைவ,கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களை சிறைப்பிடித்து அச்சுறுத்தியமை மிகவும் வருந்தத்தக்கது .
எனவே சர்வதேசம் உடனடியாக இவ்விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும் சர்வதேச நீதி பொறிமுறைக்குள் இலங்கையை உட்படுத்தி சர்வதேச நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிறுத்த வேண்டும் எனவும் மேலும் இவ்வாறானசம்பவங்கள் இடம் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

