
தோட்டத் தொழிலாளியின் வீட்டை அழித்த அதிகாரி; மாத்தளையில் சம்பவம்
மாத்தளை எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ரத்வத்த கீழ் பிரிவில் தோட்டத் தொழிலாளர்கள் அமைத்த தற்காலிக குடியிருப்புகள் தோட்ட முகாமையாளரினால் நேற்று முன்தினம் சனிக்கிழமை உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன் பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
ரத்வத்த கீழ் பிரிவில் மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், தமக்கு வீடொன்றையோ, வீடமைக்க காணித்துண்டொன்றையோ வழங்குமாறு பல வருடங்களாக பல தோட்ட முகாமையாளர்களிடம் இக்குடும்பத்தினர் கேட்டு வந்துள்ளனர்.
அவ்வகையில் தற்போதுள்ள முகாமையாளருக்கு முன்னதாக கடமையிலிருந்த முகாமையாளர், ஒரு இடத்தைக் காட்டி அங்கு வீடமைத்துக் கொள்ளுங்கள் என அனுமதி வழங்கிய நிலையில், இந்தக் குடும்பத்தினர் வாழை மரம் உள்ளிட்ட சில பயிர்களையும் அவ்விடத்தில் நாட்டியதுடன், ஒரு கிழமைக்கு முன்னர் அவ்விடத்தில் தற்காலிக குடியிருப்பொன்றை அமைத்துள்ளனர்.
இதையறிந்து அந்த இடத்திற்கு தனது அதிகாரிகள் சகிதம் வருகை தந்த தோட்ட உதவி முகாமையாளர், அந்தக் குடியிருப்பை உடைத்து பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியதுடன் முறையற்ற விதத்தில் அவர்களையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அரச மற்றும் தனியார் தோட்டங்களில் வசிக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் அச்சுறுத்தல் வழங்கி வரும் நிலை அதிகரித்துள்ளது. இறம்பொடை தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளுக்கு பின்னர் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

