
13 ஆவது திருத்தத்தை செயற்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தின் அனுமதியை கோருவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பது அர்த்தமற்ற செயற்பாடு என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் சபையினால் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். எமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த மற்றைய அதிகாரங்களை செயற்படுத்துவதற்கே அவர் எதிர்பார்க்கின்றார். அதற்காக பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதே அவரின் நோக்கமாகும். ஆனால் இது அர்த்தமற்ற வேலையே. பாராளுமன்றத்திற்கு அதில் செய்ய வேண்டிய எதுவும் கிடையாது. இது வெறும் கண்கட்டு மட்டுமே.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். இதனை செயற்படுத்துவதற்கு பாராளுமன்றம் அனுமதியளிக்க வேண்டியதில்லை. இதனை செயற்படுத்துவதா? இல்லையா? என்பது நிறைவேற்றுத்துறை பாராளுமன்றத்திடம் கேட்பது எந்த அர்த்தமும் கிடையாது. அரசியலமைப்பை செயற்படுத்துவதற்கு சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று துறைகளும் கடமைப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில், இதனை(13ஐ) ஏன் மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும். அப்படியென்றால் இதில் ஏதோ உள் நோக்கம் உள்ளது.
மக்களின் பிரச்சினையை திசை திருப்பும் தந்திரமாக 13 வது திருத்தச் சட்டத்தை கொண்டு வருகின்றனர். ஜனாதிபதிக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அவர் தட்டிக்கழித்து வருகிறார்.
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் யோசனைகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி செயலகத்தின் மூலம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அது கண் துடைப்பு நடவடிக்கை.
மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலைமையில், யாருக்கு அதிகாரங்களை பகிரப்பட போகின்றனர் என்ற கேள்வி எழுகிறது.மக்கள் பிரதிநிதிகளை கொண்டு அமைந்த மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும்.
எப்படியான தந்திரங்களை செய்தாலும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது.
இன்று மக்கள் வாழ்க்கை பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக என்ன செய்வது என்று சிந்தித்துக்கொண்டு இருக்கின்றனர். இது தொடர்பில் தீர்வுகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு தீர்வு காண்பதற்கு அதிகாரிகளுக்கு முடியாதுள்ளது. நீரை தாமதமின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான மக்கள் அவதானங்களை திசை திருப்புவதற்கான திட்டமிட்ட செய்பாடே 13 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கும் செயற்பாடு அமைகின்றது என்றார்.

