
முதல் இரு இடத்திற்குள் நாம் இருக்கிறோம்; பிரதான கட்சிகள் பிளந்து விட்டன
நாட்டின் பிரதான அரசியல் முகாம்கள் பிளவடைந்து விட்டன என்றும், இனி அவர்களா? தேசிய மக்கள் சக்தியா? முதலாவது, இரண்டாவது இடத்தை பிடிக்கப் போகின்றது என்ற கேள்விகளே காணப்படுகின்றது என்றும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜா-எல தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கடந்த பல தசாப்தங்களாக நாட்டு மக்கள் மாற்றங்களை எதிர்பார்த்து அரசாங்கங்களை அமைத்தனர். அதேபோன்று அரசாங்கங்களை கவிழ்க்கவும் செய்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நடக்கவில்லை. தலைவர்கள், அரசாங்கங்கள் மாறினாலும் அரசியல் கலாச்சாரம் மற்றும் பொருளாதார கொள்கைகளில் மாற்றங்கள் நடக்கவில்லை. ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.
இப்போதிருப்பவர்களில் இரு தரப்பினரும் நிறங்களால் மட்டுமே வித்தியாசமானவர்கள். ஆனால் இரண்டும் வேறுபட்ட குழுக்கள் அல்ல. கொள்கைகள் சமமானது. ரணிலுக்கு பதிலான மகிந்தவோ மகிந்தவுக்கு பதிலாக ரணிலையோ நியமிப்பதில் பலனில்லை. இருவரும் ஒன்றே.
இதேவேளை நாட்டில் இப்போது இரண்டு முகாம்கள் கட்டியெழுப்பட்டுள்ளன. அதாவது ரணில், மகிந்த, சஜித் ஆகியோரை கொண்ட முகாம் மற்றும் மக்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் முகாம் என்று இரண்டு உள்ளன. ஆனால் பிரதான அரசியலில் பிளவுக்குள் ஏற்பட்டுவிட்டன. அடுத்ததாக யார் முதலாவது, இரண்டாவது என்பதையே அறிய வேண்டியுள்ளது. இதில் அண்மையில் நடைபெற்ற கூட்டுறவு வாக்கெடுப்பில் எமக்கு கிடைக்கும் வெற்றிகள் மூலம் எமக்குள்ள பலம் வெளிப்படுகின்றது.
எவ்வாறாயினும் இவர்கள் அதிகாரத்தை இலகுவில் கைவிடப் போவதில்லை. பரம்பரையாக அதனை கைமாற்றிக்கொண்டு இருப்பர். ரணில் தனது மைத்துனர் ருவான் விஜேவர்தனவுக்கு வழங்குவார். மகிந்த நாமலுக்கு வழங்குவார். ஆனால் நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் அவ்வாறான பரம்பரை அதிகாரங்களை இல்லாது செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

