
13ஐ முழுமையாக நிறைவேற்றுவதற்கு ஆதரவுக்கு மத்தியில் கடுமையான எதிர்ப்பு
*முழுமையான அதிகாரம் வேண்டும் -தமிழ்த் தரப்பு
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த தே வையில்லை என அடிப்படைவாத கட்சிகளின் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பொலிஸ் அதிகாரத்துடன் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என தமிழ் கட்சிகள் வலியுறுத்தின.
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக .ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்திலேயே இவ்வாறான எதிரும் புதிருமான நிலைப்பாடுகள் முன் வைக்கப்பட்டன.
விமல் வீரவன்ச, உதயகம்மன்பில.
அத்துரலிய ரத்னதேரர் சரத் வீரசேகர உள்ளிட்ட அடிப்படைவாத கட்சிகளை சேர்ந்தவர்கள் 13ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டாம் .அதற்கு அவசியமும் அவசரமும் கிடையாது. அவ்வாறு நிறைவேற்ற ஜனாதிபதிக்கும் மக்கள் ஆணை தற்போது கிடையாது. மக்கள் ஆணை கிடைத்த பின்னர் தேவையானால் அதனை நடைமுறைப்படுத்துங்கள் எனக் கூறி தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆனால் இரா .சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு,சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் முழுமையான பொலிஸ் அதிகாரத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும். அதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என உறுதிபடத்தெரிவித்தன.
குறிப்பாக சி .வி.விக்னேஸ்வரன் எம்.பி. குறிப்பிடுகையில்,பொலிஸ் அதிகாரம் கட்டாயம் தேவை. பொலிஸாருக்கு ஆயுதங்களை வழங்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் எங்கள் இளைஞர்களை நிர்வாக சேவையில் இணைக்க வேண்டும். பொலிஸ் அதிகாரத்தை வழங்காது விட்டால் தம்மை நீங்களாகவே புறக்கணிப்பதாக, வேறுபடுத்துவதாகவே எமது இளைஞர்கள் கருதுவார்கள். இதனால் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாது போகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
விக்னேஸ்வரனின் இந்த கருத்தத்துக்கு லக்ஷ்மன் கிரியெல்ல ,குமார வெல்கம ஆகியோர் வரவேற்புத் தெரிவித்தனர் .
இதன்போது எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.யை நோக்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,முன்னர் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை என்றீர்கள் இப்போது என்ன கூறுகிறீர்கள் என கேட்டபோது 13ஆவது திருத்தச்சட்டம் பொலிஸ் அதிகாரத்துடன் முழுமையாக அமுல் படுத்தப்படவேண்டும் என்பது எமது நி லைப்பாடு எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது சஜித் பிரேமதாஸ,டலஸ் அழகப் பெரும, குமார வெல்கம போன்றவர்கள் மக்கள் மத்தியில் நல்லிணக்கம், புரிந்துணர்வு ஏற் படவேண்டும் எனவும் அதற்காக 13ஆவது திருத்தச்சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதை தாம் எதிர்க்கமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் தொடர்பில் சகல கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல . இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்கள். எனவே எதிர்காலத்தில் மாகாணசபை முறைமையை நீடிக்க வேண்டுமானால் தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது எனவும் கூறியதுடன் 13 தொடர்பான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்போம் எனக்கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இ.தொ.க பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சீ.வி விக்னேஷ்வரன், சாகர காரியவசம், டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, கெவிது குமாரதுங்க, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, வண. அத்துரலியே ரதன தேரர், வீரசுமன வீரசிங்க, அநுர பிரியதர்சன யாப்பா, லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

