விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்ல படையினருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும்

விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்ல படையினருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும்

மத்திய வங்கியின் குண்டுவெடிப்பில் 91 உயிர்களை காவு கொண்ட விடுதலைப் புலி பயங்கரவாதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது போன்று குற்றஞ்சாட்டப்பட்ட படை வீரர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கிமீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருநூறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவாறு கூறிய நாமல் ராஜபக்ஸ எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார். குறிப்பாக 1991ஆம் ஆண்டு மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதல் நடத்தி 200க்கும் மேற்பட்டோரை காயப்படுத்தி 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

புலிச் சந்தேக நபர்களுடன் நானும் மகசின் சிறைச்சாலையில் இருந்தேன். நான் விளக்கமறியலில் இருந்த நேரம் அது.எனக்கும் சிறை வாழ்க்கை அனுபவம் உண்டு.

சிறைகளில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுவிப்பதில் தவறில்லை .அதேநேரம் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தண்டனை பெற்று சிறையில் பல இராணுவ வீரர்கள் உள்ளனர் . இவ்வாறு அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் முன்னாள் இராணுவ வீரர்களையும் இவ்வாறு ஜனாதிபதி விடுவிக்க வேண்டும் என்றார்.

15, 20 வருடங்களாக விளக்கமறியலில் உள்ளவர்களை ஜனாதிபதி அவர்கள் திட்டமிட்டு மன்னிப்பதிலோ அல்லது விடுதலை செய்வதாலோ பிரச்சினை இல்லை.

மறுபுறம், போர்வீரர்கள் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாக உள்ளனர்.ஜனாதிபதி அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினால், இவர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பொது மன்னிப்பு புலிப் பயங்கரவாதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது. போர் வீரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருப்பின் ஜனாதிபதி அவர்களையும் மன்னித்து விடுவிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )