
நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் பொறுப்பை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கக் கூடாது
நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை மத்திய வங்கிக்கு ஒப்படைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ மத்திய வங்கி, திறைசேரி மற்றும் அரசாங்கம் என்பன ஒன்றிணைந்த முயற்சிகளின் மூலம் மட்டுமே முடியும். அவ்வாறு அன்றி நாட்டின் பொருளாதா கொள்கை நிர்வாகத்தை முழுமையாக மத்திய வங்கியிடம் இவ்வாறு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நேரத்தில் ஒப்படைப்பது பொருத்தமற்றதே. தேர்தல்கள் ஆணைக்குழுவை தேர்தல் விடயத்திலும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை இலஞ்ச ஊழல் விடயத்திலும் சுயாதீனமாக்க முடியும். ஆனால் நிதி கொள்கையை அரசாங்கத்தினால் சுயதீனமாக்க முடியாது. இது முழு சமூகத்துடனும் தொடர்புடையது. இதனால் மத்திய வங்கிக்கு பொருளாதாரத்தை முழுமையாக நடத்திச் செல்லும் பொறுப்பை ஒப்படைக்க முடியாது.
கடந்த காலத்தில் பாரிய மத்திய வங்கி மோசடி நடந்தது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை விரட்ட வேண்டும் என்று கூறியே மக்கள் ஆணையை பெற்றனர். ஆனால் இந்த சட்டமூலம் இருந்திருந்தால் அவ்வாறு ஆணையை கோரியிருக்க முடியுமா?
நுண் கடன்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இப்போது யாழ். மாவட்டத்தில் நுண்கடன் திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதிக வட்டிக்கு கடன்களை வழங்குகின்றனர். இந்தளவுக்கு அதிக வட்டி அறவிட வங்கிகளுக்கு அனுமதியை மத்திய வங்கி எப்படி வழங்குகின்றது.
இவ்வாறான நிலைமையில் சட்டவாக்க துறையில் இருந்து முழுமையாக மத்திய வங்கியை விடுவிக்கவே இது தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வருகின்றனர். இதனால் பொறுப்பு கூறல் இல்லாது போகும். இனி மக்களால் தெரிவு செய்யும் அரசாங்கத்தினால் பொருளாதாரம் தொடர்பில் தீர்மானிக்க முடியாது போகும். மக்கள் அரசாங்கத்தை அமைத்தாலும் பயனற்றதாகிவிடும் என்றார்.

