
13க்கும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்; அதிகாரப் பகிர்வுக்கும் இடமளிக்கப் போவதில்லை
இலங்கையில் 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கத்துக்கோ அல்லது இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறை யை அமுல்படுத்தவோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி. யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசியத்துக்கு அமைய 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.இலங்கையில் சமஷ்டி முறைமையை அமுல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை, 13 ஆவது திருத்தத்துக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் .
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியல்ல. 35 சதவீத வாக்குகளே அவர்களுக்கு உண்டு.ஐந்து மாவட்டங்களையே அவர்கள் பிரநிதித்துவப்படுத்துகிறார்கள்.ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கையல்ல.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு எப்போதும் நான் எதிர்ப்பை வெளிப்படுத்துவேன்.பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் அதிகார பகிர்வுக்கு இடமளிக்கப் போவதில்லை.பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கினால் பொலிஸ் சேவை கேலிக் கூத்தாக்கப்படும்.பாராளுமன்றத்தின் அனுமதியுடனேயே அதிகார பகிர்வு சாத்தியமாகும் அவ்வாறு இல்லாமல் ஒன்றும் முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த நாட்டை முழுமையாக சமஷ்டியாட்சி நாடாக மாற்றுவதற்கு அரசியலமைப்பினால் ஒருசில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றார்.

